வெளிநாடுகளில் சமூக வலைதளங்கள்

வெளிநாடுகளில் சமூக வலைதளங்கள் ஆரோக்கியமான விஷயங்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தியாவில் மட்டும் இரண்டே இரண்டு உருப்படாத விஷயங்களுக்குதான் பிரதானமாக பயன்படுகிறது.
1)பொய்களையும், வதந்திகளையும் செய்திகள் போல பரப்புவது.
2)கேலி செய்வது.
முதல்விஷயத்தை இப்போதைக்கு விடுங்கள். இரண்டாவது விஷயமான 'கேலி செய்வது' என்பது ஒரு மனநோயைப் போலவே தமிழ்ச்சமூகத்தில் பரவி இருக்கிறது. எதையும், எல்லோரையும் கேலி செய்வது என்பதில் நம் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். என்ன விஷயம் நடந்தாலும் உடனே ஒரு MIME உடனே ஒரு TROLL!! அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை கிடையாது. நமக்கு உருட்ட ஒரு தலை வேண்டும். அது விஜயகாந்தோ, விஜய்யோ, ஸ்டாலினோ, அஜீத்தோ. (ஜெயலலிதா இதில் சேரமாட்டார். ஏனெனில் வீரம் விளையும் இனமல்லவா, அதனால் அவதூறு வழக்கு போடாத ஆபத்தில்லாத தலைகளை தான் உருட்டுவார்கள்.)
புலி ஒரு ஃபாண்டசி படம். அதில் ஸ்ரீதேவி போத்தீஸ் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு நடிக்க மாட்டார் என்பதையும், இயல்புக்கு அப்பாற்பட்ட காட்சிகள்தான் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள சராசரியாக சினிமா பற்றிய அறிவு இருந்தாலே போதும். புலியை பக்கம் பக்கமாக ஓட்டுகின்றவர்கள் அப்படி என்னதான் எதிர்பார்த்து போய் புலி படத்தில் உட்கார்ந்தார்கள் என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. பாகுபலியை புலியில் எதிர்பார்த்தால் எதிர்பார்ப்பில் தான் தவறு. பாகுபலி கூட சரித்திரப் படத்துக்கும், ஃபாண்டசி படத்துக்கும் இடையில் தத்தளித்த படம். ஆனால் புலி மிகத் தெளிவான 'ஃபாண்டசி' திரைப்படம். ஸ்ரீதேவி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார். இதையே ஒரு ஹாலிவுட் படத்தில் சார்லிஸ் தெரானோ, காமரூன் டயாஸோ செய்திருந்தால் வாயை மூடிக்கொண்டு பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் செய்யப்பட்டவுடன் பொட்டியை எடுத்துக்கொண்டு கேலி செய்ய கிளம்பிவிட்டார்கள். வழக்கமான படங்களிலேயே நடித்தால், "ஒரே மாதிரி நடிக்கிறான்யா," என கிண்டல் செய்ய வேண்டியது. புதிதாக எதையாவது செய்தால் "இவனுக்கு எதுக்கு இந்த வேலை?" என கிளம்ப வேண்டியது.
ஒரு ஃபாண்டசி படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டுமோ அதை எதிர்பார்க்க வேண்டும். ஆரியபவனில் போய் எனக்கு கோலா உருண்டைதான் வேண்டும் எனக் கேட்டால் அது ஆரியபவனின் குற்றமல்ல, கேட்பவனின் குற்றம். ஸ்ரீதேவி சிரிப்பது பயமாக இருக்கிறதாம். ஒரு ஃபாண்டசி படத்தில் வரும் வில்லி மகராணி வேறு எப்படி சிரிப்பார்? விமர்சனம் எழுதுகின்றவர்களைப் பிடித்து சிரித்துக்காட்டச் சொல்லவேண்டும். கை இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? ஒரு நல்ல முயற்சி அநியாயமாக இப்படி கேலி செய்யப்படுவதால் அடுத்த பல ஆண்டுகளுக்கு ஃபாண்டசி என்கிற ஜானர் பக்கமே யாரும் போக மாட்டார்கள்.
"ஒழுங்காக படம் எடு," எனச் சொல்ல காசு கொடுத்து படம் பார்க்கும் எல்லோருக்கும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல, "படம் பார்க்க முதலில் கற்றுக்கொள்," என புலி படத்தை கிண்டலடிப்பவர்களைப் பார்த்துச் சொல்லும் உரிமை சிம்புதேவனுக்கு கண்டிப்பாக இருக்கிறது. நானும் அதையேதான் சொல்கிறான். தயவுசெய்து முதலில் படம் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் புரளிகளையும், பொய்களையும், கேலிகளையும், கிண்டல்களையும் ஆட்டுமந்தைகளைப் போலப் பரப்பாதீர்கள். சுயமாக சிந்தியுங்கள். படம் பார்ப்பதற்காக தியேட்டருக்குப் போங்கள், ஆடுகளுடன் சேர்ந்து ஆடாக மாறி கிண்டல் செய்வதற்காகவே போகாதீர்கள்.
தியேட்டரில் உட்காரவே முடியவில்லை, சுறாவை விட மோசம், சிம்புதேவன் விஜய்யை ஏமாற்றிவிட்டார் என்பதெல்லாம் பச்சையாக, கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படம் பார்ப்பவர்கள் கிளப்பி விடும் பொய்கள். பலர் படம் பார்க்காமலேயே அந்த கும்பலோடு கோவிந்தா போடுவதுதான் இன்னும் பரிதாபம். இன்னும் சிலரோ படம் பிடித்திருந்தாலும், "நம்ம மட்டும் எதுக்கு தனியா பேசிகிட்டு," என நினைத்து ஆட்டுமந்தை கும்பலில் இரண்டறக் கலந்துவிட்டார்கள். குழந்தைகள் புலியை மிகவும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதுதான் திரையரங்குகளில் நடந்து கொண்டிருக்கும் நிஜம். அந்த வகையில் சிம்புதேவனும், விஜய்யும் ஜெயித்திருக்கிறார்கள்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth