மனைவி அமைவதெல்லாம்!!

மனைவி அமைவதெல்லாம்!!

எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

(சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth