சேலம் உருவான தினம் நவம்பர் 1
SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்பு
S - Steel - எஃகு A - Aluminium - அலுமினியம் L - Limestone - சுண்ணாம்புக் கல் E - Electricity - மின்சாரம் M - Mangoes - மாம்பலம்
'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. , சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிறகு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு வந்தது.. பின்னர் 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு ஆங்கில அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க, ஆங்கிலே அரசு 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைத்தது.இந்த அமைப்பின் மூலம் சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.
1886 நவம்பர் முதல் தேதியன்று நகராட்சியாக, சேலம் அறிவிக்கப்பட்டது. சேலம் நகராட்சியின் முதல் கூட்டம், ஆங்கிலேயே கலெக்டர் அர்பத்நட் தலைமையில் நடந்தது. இவர் உட்பட 12 பேர் கொண்டு நகராட்சி கூட்டம் நடந்தது.இந்த நகராட்சி கூட்டம் கமிஷனர்கள் கூட்டம் என அழைத்தனர்.நகராட்சியின் முதல் தலைவராக கலெக்டர் அர்பத்நட் இருந்தார். அப்போது சேலம் நகராட்சி ஒன்பது வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது.ராஜாஜி 1917- 1919ல் சேலம் நகராட்சி தலைவராக இருந்தார்.1937ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகாவாச்சாரியார், ராமசாமி உடையார், முன்னாள் அமைச்சர் மோகன் குமாரமங்கலம்,புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை, கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன், இசையரசி சேலம் ஜெயலட்சுமி,ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
சேலம் நகராட்சி படிப்படியாக விரிவடைந்து, பெரிய நகராட்சியாக மாறியது. 1972 ஏப்ரல் முதல் தேதியன்று சேலம், சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. நகராட்சியாக இருந்த சேலம், 1994 ஜூன் முதல் தேதியன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது.
சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்
சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இந்தியாவின் மதிய அரசு இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி செயில் (SAIL) நிறுவனம், சேலம் இரும்பாலையும் அமைத்துள்ளது, சேலம் இரும்பாலை தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட் தாது இந்தியாவிலேயே முதல் தரமானதாகக் கருதப்படுகிறது.
அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
கைத்தறி வணிக நிலையங்கள் நிறைந்தது.இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் லீபஜார் லீபஜாரில் உள்ள கடைவீதிகளில் மொத்த வியாபார நிலையங்கள், பல்வேறு மண்டிகள் உள்ளன. இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
பெரியார் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 2 மருத்துவ கல்லூரிகள் இங்கு உள்ளன. அரசு பொறியியல் கல்லூரி இங்குள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளன.
பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம்.
சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு.
இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.
சேலத்தைச் சுற்றி பார்க்க தகுந்த இடங்கள்
இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட் ,சேலம் இரும்பாலை( அனுமதியுடன் பார்க்கலாம்) 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மக்களின் பொழுது போக்கு வசதிக்காக அண்ணா பூங்கா, ராமகிருஷ்ணா பூங்கா, ஃபேர்லேன்ட்ஸ் சிறுவர் பூங்கா,தொங்கும் பூங்கா போன்றவைகள் அமைந்துள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமாக பொதுக்கூட்டம் நடத்த வசதியான போஸ் மைதானமும், கலைநிகழ்ச்சிகளை நடத்த வசதியாக நேரு கலையரங்கம், ஆகியவையும், கோட்டை பகுதியில் மாநகராட்சி கலைஞர் திருமண மண்டபமும் உள்ளன.
ஏற்காடு
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்டது ஏற்காடு.
மேட்டுர் அணை
மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும்.
1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும்.
இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்:
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.பிற்காலத்தில் மும்முடிச் சோழனும் சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்கா முடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றி 306 சதுர அடி 164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.மாசி மாதத்தில் 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி கல் தாமரை சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.
இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பாகும்.
பொய்மான் கரடு
சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.
Comments