நாயினும் கடையேன் அன்புசார் அன்பர்களே

நாயினும் கடையேன்
அன்புசார் அன்பர்களே இந்த பதிவினை படிக்கும்போது நீங்கள் இறைவன் முன்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.
தனது குருவிடம் சென்ற சீடன் ,  குருவே அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார்கள் ஆகவே நாம்தானே உயர்ந்தவர்கள் என்றார். அதற்கு குருவானவர், அவரிடம் உள்ள கர்வத்தை போக்க எண்ணி, நீர் சொல்வது சரிதான், எனினும் எனக்கு ஒரு தெளிவு தேவைப்படுகிறது ஆகவே நீ சென்று உன்னைவிட தாழ்வான ஒன்றைக் கொண்டு வா என்றார்.
அதில் என்ன சிரமம் இருக்கிறது என்று எண்ணி, தன்னைவிட தாழ்வான பொருளை தேடினான். பார்ப்பவையெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தில் உயர்ந்ததாக இருந்தது. எனவே இறுதியாக வேறுவழியே இல்லாமல் கொல்லைபுறத்தில் இருந்த மலத்தினை எடுக்கச்சென்றான். உடனே அந்த மலமானது என்னைத்தொடாதே என்று அவனை எச்சரித்தது. ஏன்? எதற்காக? உன்னைத் தொடக்கூடாது எனக்கேட்டான் சீடன். இல்லை, இல்லை நேற்று இந்நேரம் நான் ஆப்பிள் பழமாக இருந்தேன், உன்னை போன்ற ஒருவன் என்னைத்தொட்டு உணவாக உட்கொண்டான் அதன் விளைவாக இன்று நான் இப்படி இருக்கிறேன், மீண்டும்  நீ என்னைத்தொட்டால் நான் எந்த நிலைக்குச்செல்வேனோ  என்றது அந்த மலம்.
இதைக்கேட்ட அந்த சீடனின் ஒவ்வொரு உருப்பும் கூனிக்குறுகியது. அவன் தனது நிலையை உணர்ந்தவனாக குருவிடம் சென்றான். குருவானவர், அன்புச் சீடனே நாம் உயர்ந்த பிறவிதான், காரணம் பிறக்கும்போது இறைவனை உணராமல் இருந்தாலும், இறைவனை உணர்ந்து பிறவிப் பிணியை போக்கும் வழிவகையினை அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம். எனினும் நாம் அந்த ஆற்றலை பயன் படுத்துகிறோமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இது ஒருபுறம் இருக்க, நாமே உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு இறைவன் முன்னிலையில் நின்றால் அது முற்றிலும் மூடத்தனமாகும் என்றார்.
நண்பர்களே, தன்னை தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுகிறான் என்கிறது கிறுத்துவம், மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ”நாயினும் இழிவானவன் நான்” என தன்னை இழிவுபடித்திக்கொண்டு இறைவன் முன்னிலையில் நின்றார். இன்று இறைவனோடு கலந்து இறை நிலையில் நிற்கிறார். நாம் எவ்வளவு பெரிய பக்தியினை இறைவனிடம் செலுத்தினாலும், எந்த பதவியினை அடைந்தாலும், பெருமளவு செல்வம் படைத்தாலும் இறைவன் முன்னிலையில் நாயினும் கடையேன் என்பதை உணர்ந்தால் அதன் விளைவு இறை நிலையை அடைவதேயாகும்.
-திருசூர்.சிவ.இராம.ஜோதி.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth