வாழ்க்கையின் அழகான தருணங்களை அனுபவித்திருக்கிறீர்களா❓

🌺🌺🌺வாழ்க்கையின் அழகான தருணங்களை
அனுபவித்திருக்கிறீர்களா❓

🌺⏩�உங்கள் வாழ்க்கையில் முழு மன நிறைவான தருணங்கள் இருந்திருக்கின்றனவா? வார்த்தைகளால் விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்த தருணங்கள் இருந்திருக்கின்றனவா? அப்படி இருந்திருக்கவில்லை என்றால் நீங்கள் வாழ்க்கையின் சாராம்சத்தை ஒரு போதும் கண்டதில்லை என்றே பொருள். ஏனென்றால் வாழ்க்கையின் உண்மையான அழகே, அர்த்தமே அது போன்ற தருணங்களில் தான் இருக்கிறது.

🌺⏩மிக அற்புதமான இசை வெள்ளத்தில் மூழ்கும் போது அதை நீங்கள் உணர முடியலாம். மிக அருமையான உன்னதமான எழுத்துக்கள் உங்கள் இதயத்தைத் தொடும் போதோ, உங்கள் அறிவுக்கண்ணைத் திறந்து மேலான உண்மைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் போதோ அந்த நிறைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

🌺⏩மிக அழகான இயற்கையழகில் உங்களை மறந்து லயிக்கும் தருணம் அந்தத் தருணமாக இருக்கலாம். சில உயர்ந்த செயல்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கையில் அந்த உணர்வை நீங்கள் அடைந்திருக்கலாம். சுயநலமில்லாமல் ஒரு சேவை செய்து அதன் பயனடைந்தோரின் மகிழ்ச்சியைக் கண்டு களிக்கும் போது அதை நீங்கள் உணரலாம். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அந்தத் தருணங்கள் உங்கள் இயல்பையும், உங்கள் ரசனையையும் பொறுத்து அமைகின்றன.

🌺⏩இவைகளில் பலவும் பெரிய செலவில்லா தருணங்கள். ஆனால் இவை தரும் அமைதியையும், நிறைவையும், ஆனந்தத்தையும் நீங்கள் எத்தனை செலவு செய்தும் எளிதில் பெற்று விட முடியாது என்பது மட்டும் நிச்சயம். இவை மட்டுமே ஒவ்வொரு மனிதனும் உண்மையாக வாழும் தருணங்கள்.

🌺⏩வாழ்க்கையின் ஆழத்தைத் தொடும் தருணங்கள் அவை. பிரபஞ்சத்தின் ரகசியங்களை உணரும் தருணங்கள் அவை. அந்தத் தருணங்களில் பூரணத்துவம் நிறைந்திருக்கும். குறைபாடில்லாத, வேண்டுதல் இல்லாத, உயிர்ப்புள்ள முழுமையான தருணங்கள் அவை. தன்னை அடையாளம் காணும் தருணங்கள் அவை. "ஆஹா... இதுவல்லவோ ஆனந்தம்" என்று உணரும் தருணங்கள் அவை. 

🌺⏩மனிதர்கள் எந்திரத்தனமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகையில் இந்த ஆஹா... தருணங்களை அனுபவிக்கத் தவறுகிறார்கள். அடுத்தவர் பார்வைக்குத் தெரியாத இந்தக் கணங்களை, அடுத்தவர் பார்வைக்காகவே வாழ்பவர்கள் அடையாளம் காணவே தவறி விடுகிறார்கள் என்று கூட சொல்லலாம். ஒரு அழகான சூரியாஸ்தமனத்தின் அழகில் மனதைப் பறி கொடுத்து மெய் மறந்து நிற்பவன் ஆனந்தத்தை ரசனையே இல்லாதவனுக்குப் புரிய வைக்க முடியாது. ஒரு உன்னதமான படைப்பைப் படைத்த பின் ஒரு கலைஞன் பெறும் நிறைவை அவனுடைய அக்கௌண்டண்டினால் கணக்கில் குறித்துக் கொள்ள முடியாது. 

🌺⏩இந்த ஆஹா... தருணங்கள் எல்லாமே குறுகிய காலம் மட்டுமே பெரும்பாலும் தங்குகின்றன என்றாலும் அவை மனிதனுக்கு வாழ்க்கையின் அழகும் அர்த்தமும் இன்னதென்று அடையாளம் காட்டுகின்றன. மீண்டும் இந்த உலகின் ஓட்டத்தில் அவனும் அந்த அமைதியை இழந்து ஓட ஆரம்பித்தாலும் அவன் மனதின் மூலையில் அந்த அமைதியான நிறைவின் நினைவுகள் தங்கி விடுகின்றன. அவன் புத்திசாலியாக இருந்தால் அந்தத் தருணங்களை அடிக்கடி தன் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறான்.

🌺⏩உங்கள் வாழ்நாளில் அப்படி நீங்கள் சந்தித்திருந்த அழகான தருணங்கள் உள்ளனவா என்று நினைவுபடுத்திப் பாருங்கள். அவை தற்செயலாக நடந்திருக்கலாம். அதற்கு நீங்கள் பிறகு அதிக முக்கியத்துவம் தராது மறந்தும் இருக்கலாம். ஒருசில அபூர்வ தருணங்கள் நம் வாழ்வில் திரும்பத் திரும்ப நிகழ்வதில்லை என்றாலும் பெரும்பாலான தருணங்களை நாம் மனம் வைத்தால் திரும்பவும் வரவழைக்க முடியும். நேரமும் முயற்சியும் மட்டுமே அதற்கு முக்கியம். "நான் நிறைய 'பிசி'. எனக்கு நேரமே கிடைப்பதில்லை" என்று நொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள். 

🌺⏩அடிக்கடி இது போன்ற அழகான தருணங்களை சந்திக்கும் மனிதன் அதிகமாக மன அழுத்தம், மன உளைச்சல், எந்திரத்தனம், உற்சாகமின்மை, வெறுமை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. நாளடைவில் அவன் அது போன்ற நோய்கள் தீண்ட முடியாத பக்குவமான மன ஆரோக்கியம் பெற்று விடுகின்றான். எனவே இது போன்ற ஆஹா... தருணங்களை உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக அதிகமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முடிவில் நீங்கள் உண்மையாக வாழ்ந்த காலங்கள் அவையாக மட்டுமே இருக்கப் போகின்றன.
--

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth