விளக்கை ஏற்றி வைப்பதே நம் பண்பாடு; ஊதி அணைப்பது அல்ல.
ஒருவரின் பிறந்தநாள் என்பது அவர் இந்த மண்ணில் தோன்றிய நாளைக் குறிக்கின்றது. அன்றைய நாளை இன்பமாக கொண்டாடுவதில் எந்தவொரு தவறுமில்லை. ஆனால் அதை ஒரு எதிர்மறையான அர்த்தத்துடன் கொண்டாடலாமா?
பிறந்தநாளன்று கேக்கை வைத்து அதன்மேல் சுடர்விடும் மெழுகுவர்த்திகளை அடுக்கி, பின் அவற்றை ஊதி அணைப்பது என்ன தத்துவத்தைக் குறிக்கின்றது? இந்த மெழுகுவர்த்திகள் அணைந்தது போல தன் வாழ்க்கையும் அணைந்து போகட்டும் என்றா? மெழுகுவர்த்திகள் அணைந்தவுடன் இருள் சூழ்ந்திடும். அதுபோல வாழ்க்கையிலும் இருள் சூழவேண்டுமா? எதற்காக மெழுகுவர்த்திகள் ஊதி அணைக்கப்படுகின்றன என்பதற்கு எந்தவொரு காரணமும் தத்துவமும் கிடையாது. ஏனென்றால் இவ்வாறு பிறந்தநாளன்று விளக்குகளை ஏற்றிவைத்து விட்டு பின் ஊதி அணைக்கும் பழக்கம் கிரேக்கர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தது. பின்னர் இந்த பழக்கம் ஐரோப்பியர்களிடம் பரவியது. நம்முடைய (சில) மக்கள் ஐரோப்பியன் என்ன செய்தாலும் அதுதான் நாகரிகம் என்று பின்பற்றும் அடிமைகள் ஆயிற்றே? எனவே அர்த்தமுள்ள நம் பாரம்பரியங்களை மறந்துவிட்டு அர்த்தமற்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர்.
எதற்காக நாம் விளக்கை ஏற்றி வைக்கிறோம்? விளக்கு என்பது அறிவு, இன்பம், தூய்மை போன்றவற்றைக் குறிக்கின்றது. விளக்கை ஏற்றிவைப்பதால் இருள் நீங்குகின்றது. விளக்கு என்பது அறிவையும் இருள் என்பது அறியாமையையும் பிரதிபலிக்கின்றது. ஒருவர் தன் அகத்தின் இருளை நீக்கி அறிவெனும் சுடரை ஏற்றவேண்டும் என்பதே அதன் தத்துவம். மேலும், விளக்கை ஏற்றுவதால் அதன் பிரகாசம் ஒருவரின் மனத்திற்கு அளவற்ற இன்பத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது. வானத்தில் சுடர்விடும் நட்சத்திரங்கள் இருந்தால் தான் வானத்திற்கே அழகு. அவ்வாறு சுடர்விடும் நட்சத்திரங்களை ரசிப்பது மனத்திற்குப் புத்துணர்ச்சியை தரும். ஏனென்றால் ஒளிவீசும் இயல்புடைய பொருட்கள் மனிதர்களின் மனத்திற்கு களிப்பூட்டும் தன்மையுடையவை. அகத்தில் இருக்கும் துன்பங்களை பொசுக்கி இன்பத்தை ஏற்றிவைக்கும் இயல்புடையது ஜோதி. இது மனோரீதியிலான ஒரு தத்துவம்.
பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்? பிறந்தநாள் என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அன்றைய நாளை எல்லோருடனும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம். பலகாரங்கள் செய்து வீட்டை அலங்கரித்து குழந்தைக்கு பரிசுகள் வழங்கலாம். காலையிலே குழந்தையை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லலாம். வேண்டியவருக்குத் தானம் அளிக்கலாம். இதெல்லாம் நம் மரபில் இருந்த பழக்கவழக்கங்கள் தான். எனவே, கேக்கின் மீது மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அதை ஊதி அணைப்பதை தவிர்த்து விட்டு குழந்தையின் கையால் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை ஏற்ற வைக்கலாம். அல்லது பிறந்தநாள் கொண்டாடும் இடத்தில் குத்துவிளக்கை ஏற்ற வைக்கலாம். இவ்வாறு செய்வதால் குழந்தையின் வாழ்வும் வளமும் என்றும் ஒளிமயமாக அமையும்.
நம்முடைய எல்லா சுபகாரியங்களும் விளக்கை ஏற்றிவைத்து ஆரம்பிக்கப்படுகின்றது. விளக்கை ஏற்றிவைப்பது லட்சுமி தேவியை வரவேற்பதற்கு சமமாகும். அதை ஊதி அணைப்பது அதற்கு எதிர்வினையானது. ஆதலால் இனி விளக்கை ஏற்றிவைத்து விட்டு பிறந்தநாள் கொண்டாடுவோம்.
Comments