மகாவீரர்
மகாவீரர்
24ஆம் சமண தீர்த்தங்கரர்
மகாவீரரின் குறும்படம்
விவரங்கள்
மாற்றுப் பெயர்: வர்த்தமானர்
வரலாற்று நாள்: 599 – 527 BCE
குடும்பம்
தந்தை: சித்தார்த்தன்
அன்னை: திரிசாலா (பிரியாகர்ணி)
பரம்பரை: இஷ்வாகு
இடங்கள்
பிறப்பு: குன்டலகிராமா,வைசாலிஅருகே
நிர்வாணா: பாவபுரி
குணங்கள்
நிறம்: மஞ்சள்
சின்னம்: சிங்கம்
உயரம்: 6 அடி
இறக்கையில் வயது: 72 ஆண்டுகள்
கடவுளர்
யக்சன்: மதங்
யக்சினி: சித்தாயிகா
மகாவீரர் (இந்தி:महावीर), 599 – 527 BCE[1] என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் [2] சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு தொகு
வர்த்தமானாக இளவரசர் பிறப்பு தொகு
இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14,திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.
சமண சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.
சிறுவயது தொகு
சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.
பன்னிரெண்டாண்டுகள் ஆன்மீகத் தேடல் தொகு
மகாவீரரின் காலத்தில் இந்தியா
தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு,மனிதர்கள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள்,மதிப்பளித்தார்.அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை,அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார்.
பின்னாள் வாழ்க்கை தொகு
மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது. தமது 72ஆவது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார்.அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549-477 காலத்தவராக கருதுகிறார்கள்.
Comments