எங்கே ஆனந்தம் ???
மனதில் தொலைத்த ஆனந்தத்தை, மனதில் தேடுவது தானே சரி . தொலைந்த இடமான மனதை விடுத்து மற்ற இடங்களில் தேடி என்ன பயன் . .
எது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும்.
அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் ஆகா இனி எல்லாம் சுகமே என்று ஓரிரு நாட்கள் தான் மகிழ்ச்சியுடன் இருக்கும், பின் மூன்றாவது நாள் புதுத் தேவை ஒன்றை உருவாக்கி அது கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்று மறுபடியும் சொல்ல ஆரம்பிக்கும்.
இப்படி மனம் எனும் குரங்கு மனிதனைப் பாடாய்ப் படுத்தி அவனை ஒருபோதும் ஆழ்ந்த ஆனந்தத்தை அடையவிடாமல் செய்கிறது. இந்த அவல நிலைக்கு காரணம் நாம் நம் மனதை சரியானபடி வழிநடத்தாமல் விட்டது தான் காரணம்.
ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம் , மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கி குவித்தால் தான் ஆனந்தம், பிறர் பொறாமை படும்படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை வெல்ல ஆள் இல்லை என்று உலகம் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துக்களை மனதில் சிறு வயது முதலே பதிய வைத்து விட்டால் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியாது.
பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது, அதுபோல மேலே சொன்ன தவறான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் நிலைத்து நிற்பதில்லை . . .
பிரச்சனை இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. வந்த பிரச்சனையை தீர்க்க முடிவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையை பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தை படிப்பதும் தான் ஆனந்தம்.
பாதி குடம் காலியாக உள்ளது என்று சொல்வதற்கும் பாதி குடம் நிறைந்து உள்ளது என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது எனவே எதிலும் நேர்மறையான நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க மனதிற்கு பழக்கப்படுத்தி விட்டால் பின்னர் எங்கும் ஆனந்தம் எதிலும் ஆனந்தமே . . .
Comments