இந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்! - அதிர்ச்சி பின்னணி


இந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்! - அதிர்ச்சி பின்னணி

இனி தங்கத்தை விட மதிப்பான பொருளாக நீர் இருக்கும். இது மிகையான வார்த்தைகள் இல்லை. தெரிந்தே நாம் செய்த தவறுக்கான விளைவுகள் நம் வீட்டு திண்ணையில் காத்திருக்கிறது.அது எப்போது வேண்டுமானாலும், நம் வீட்டுற்குள் வரலாம். அதற்குள் நாம் சுதாரித்துக் கொள்வது நல்லது. ஆம். செயற்பாட்டாளர்கள் பல முறை அச்சம் தெரிவித்து இருந்தனர். நாம் இதே வேகத்தில் நீர் நிலைகளை சுரண்டினால், அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இருக்காது என்றனர். இனி அப்படி சொல்ல முடியாது. ஆம், நம் தலைமுறைக்கே தண்ணீர் இல்லை. மராட்டிய மாநிலத்தில் உள்ள மலேகான் நகரம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கிறது. மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டுமானால், அனைத்து திறந்த வெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டன. 

அரசும், தண்ணீர் பஞ்சமும்: 

தண்ணீர் பஞ்சம் மராட்டிய மாநிலத்திற்கு புதிதானது அல்ல. அங்கு உள்ள சிறு நகரங்கள், கிராமங்கள், பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கிறது. 2013-ம் ஆண்டு விவசாயிகள், தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் குடிநீர், விவசாயத்திற்கான பாசன நீர் கேட்டு போராடினர். சோலாப்பூரின் கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும்,  மராட்டிய மாநிலத்தின் தலைமைச் செயலகம் இயங்கும் மந்த்ராலயாவை முற்றுகையிட்டனர். ஆசாத் மைதானத்தில் அவர்கள் 23 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், எந்த பயனும் இல்லை. மக்களின் அடிப்படை தேவைக்கான போராட்டத்தை அதிகார வர்க்கம் எள்ளி நகையாடியது.

மராட்டியத்தின் துணை முதல்வர் அஜித் பவார்,  குடிதண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி குறிப்பிடுகையில், "அணையில் தண்ணீர் இல்லையென்றால் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? அணையில் சிறுநீர் கழித்தா தண்ணீர் திறந்து விட முடியும்? குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத போது, சிறுநீர் கூட வராதே"  என்று ஏளனமாக பேசினார்.  

ஏ.டி. எம்மில் பணம் எடுத்துவிட்டு,  பல முறை சிகப்பு பட்டனை அழுத்தும் அந்த சாமானியனால் எதுவும் செய்ய முடியவில்லை. பிரச்னையுடன் நாட்களை நகர்த்தினான். இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ஐம்பது பேர் மாண்டனர். பலர் இடம்பெயர்ந்தனர். தண்ணீர் பற்றாக்குறை குடிநீர், பாசன பிரச்னையாக மட்டும் இருக்கவில்லை. அது மின் உற்பத்தியிலும் இடையூறு செய்தது. ‘மின்வெட்டு அதிகரித்து இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளது’ என்று மக்கள் பிரச்னையை அவமானப்படுத்தினார் அதே அஜித் பவார்.

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் கழித்தும் இதுதான் மராட்டியத்தின் நிலைமை. எந்த அரசும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை. அதற்கான தீர்வுகளை தேடக் கூட முன்வரவில்லை என்பதுதான் பேரவலம்.

ஐபிஎல்லும், தண்ணீர் பஞ்சமும்:

இப்படி மக்களை வாட்டி வதைத்த தண்ணீர் பஞ்சம்,  மாநிலங்கள் கடந்து தெரிய காரணம் - ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆம், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில், ஐ.பி.எல். போட்டி மைதான பராமரிப்புக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை செலவழிக்க நேரிடும். அதனால், இங்கிருந்து போட்டியை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கிரிக்கெட்  வாரியம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதம்தான் அவலத்தின் உச்சம். வழக்கறிஞர்கள், “எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது கஷ்டம். வேண்டுமானால்,  தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை இலவசமாக அளிக்கிறோம்’  என்றனர். அதாவது, எந்த அரசியலும் தெரியாமல், கிரிக்கெட்டை ரசிக்கும் சாமான்யனுக்கு கழிவு நீர்தான் மிச்சம். அனைத்து தரப்பையும் விசாரித்த நீதிபதி, மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை மாற்றுவது மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மராட்டியத்தில் நிலவும் வறட்சிக்கு தீர்வு காண்பதற்கு இது ஒரு தொடக்கமாகும். தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநிலத்தில் பல மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதனால் வேறுவழியின்றி மராட்டியத்தில் இருந்து போட்டியை மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டியதாகிறது என்று தீர்ப்பளித்தது. 

லாத்தூர் நகரத்தை சேர்ந்த தன்ராஜீ, “இங்கு அனைத்து கிணறுகளும் வற்றிவிட்டது. நீர் நிலைகள் மரணத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. அதனால், அந்த நீர் நிலைகளை நம்பி வாழும் மக்களும், கால்நடைகளும் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள். நகராட்சி இருபது நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நீர் தருகிறார்கள். இதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம்.”

இதுதான் அங்கு உள்ள அனைத்து நகரங்களின் நிலைமை. மத்திய பிரதேசத்தின் நிலைமை இதை விட மோசம். அங்குள்ள 40 மாவட்டங்களும் தண்ணீர் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்கள் பல மைல் தூரம் ஒரு குடம் தண்ணீருக்காக நடக்கிறார்கள். தேவதூதனுக்காக காத்திருப்பவர்கள் போல, குழந்தைகள் உடபட அனைத்து குடும்பங்களும் ஒரு வாளி தண்ணீருக்காக பல இரவுகள் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு, தண்ணீர் எடுத்து வருபவனே தேவ தூதன்.

தீர்வு என்ன...?

 நாம் தீர்விலிருந்து பல மைல் தூரம் வந்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல், மேலும் தவறான பாதையிலேயே செல்கிறோம். இது மராட்டிய மாநிலத்துக்கான பிரச்னை மட்டுமல்ல. மொத்த இந்தியாவிற்குமானது. ஆம், நாம் நீரை சேமிக்கும் வழிகளை ஆராயாமல். அதை மேலும் மேலும் சுரண்டும் வழிகளையே தேடுகிறோம். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட தொழிற்நுட்பத்தின் மூலம் இந்தியா 24 மணி நேரமும் 23 மில்லியன் ஆழ்துளைக் கிணறுகளை இயக்கி கொண்டிருக்கிறது. இது தற்காலிகமான தீர்வுகளை வேண்டுமானால் தரலாம். ஆனால், நிரந்திர தீர்வை தராது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும், ஒரு தீர்வல்ல என்கிறார் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஜான் ஆர்ச்சர். குடிநீராக்கப்பட்ட ஒரு லிட்டர் கடல் நீர் மீண்டும் கடலுக்கு ஒரு லிட்டர் விஷத்தை அனுப்புகிறது என்கிறார் ஆர்ச்சர்.  அது மட்டுமல்லாமல், இதற்கு அதிக மின்சாரம் தேவை. இது சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது. ஆக, இதுவும் நிரந்தர தீர்வல்ல. 

தண்ணீர்,  மக்களின் அடிப்படை தேவைக்கானதைவிடவும், அதிகமாக தொழிற்சாலைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் நம் அடிப்படை தேவைக்கானதல்ல. ஆடம்பரத்துக்கானது.

சரி என்னதான் தீர்வு...?  நுகர்வை குறைப்பது. நுகர்வை குறைப்பதன் மூலம் தேவையற்ற உற்பத்தியை குறைப்பது. சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளை மூடவைப்பது. இது மட்டும்தான் தீர்வு. தவறுவோமானால், எதிர்காலம் மோசமானதாக இருக்கும். நீங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் குடிக்க தண்ணீர் இருக்காது. இது ஏதோ பக்கத்து மாநில பிரச்னை என்று நினைக்காதீர்கள். மராட்டியமும், மத்திய பிரதேசமும் நமக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. 

விழிப்போம்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth