லீலை கண்ணன் கதைகள்..…யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்..

லீலை கண்ணன் கதைகள்.....20…யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்..
சென்ற இரண்டு பதிவுகளில் கிருஷ்ணன் கோபிகைகளிடம் செய்த குறும்புத்தனங்களை பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக யசோதைக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு நாள் கிருஷ்ணன் தன் நண்பர்களோடு வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று பலராமன் யசோதையிடம் சென்று, "அம்மா, அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்றுவிட்டான்" என்று சொன்னான். யசோதை இதை நம்பவில்லை. ஆனால் மற்றச் சிறுவர்களும், "ஆமாம், அம்மா! நாங்கள் தடுத்தும் கேளாமல் அவன் எங்கள் எல்லோருக்கும் எதிரில் மண்ணை தின்றான்" என்று சொன்னார்கள். இதை கேட்டு யசோதை கோபம் கொண்டாள். வீட்டில் எத்தனையோ தின்பண்டங்கள் இருக்க, அவன் எதற்காக மண்ணை தின்ன வேண்டும்? அவள் ஓடிப் போய், இடக்கையினால் கிருஷ்ணனை பிடித்துக்கொண்டு வல கையினால் அவனை அடிக்கப் போனாள். "குறும்புக்காரப் பயலே! எதற்காக மண்ணை தின்றாய்! உன் நண்பர்களும் பலராமனும் நீ மண் தின்னதாகச் சொல்லுகிறார்களே!" என்று கேட்டாள்.
"இல்லை, அம்மா நான் மண் தின்னவில்லை. அவர்கள், எல்லோரும் பொய் சொல்லுகிறார்கள். நீ வேண்டுமானால் என் வாயைப் பார்" என்றான் கிருஷ்ணன். ஆனால் அன்னை யசோதை அவன் வாயில் என்ன பார்த்தாள்! அவனுடைய சிறு வாயுக்குள் அவள் அண்டம் முழுவதையும் பார்த்தாள். பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், எல்லாம் அங்கு இருந்தன! எல்லாத் தேவர்களும் தேவதைகளும் அங்கே காணப்பட்டார்கள். ஓர் அபூர்வமான ஒளி வாயில் இருந்தது. உள்ளே கோகுலத்தைக் கண்டாள். கோகுலத்தில் தான் கிருஷ்ணன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தன் மகனின் சிறு வாயிக்குள் இத்தனை பொருள்கள் இருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை! ஆனால் எல்லாம் அங்கு இருக்கின்றனவே! அவள் ஆச்சரியமும் பயமும் அடைந்தாள். "இது என்ன கனவா? அல்லது ஆண்டவனின் செய்கையா! அல்லது என்னுடைய கற்பனைதானா? அல்லது இந்தச் சிறுவனுக்குத்தான் ஏதோ அதிசிய சக்தி இருக்கிறதா!" என்று பலவாறு நினைத்துப் பார்த்தாள்.
அதற்குப் பிறகு, "இது கனவல்ல. நான் தான் என் கண்களாலேயே பார்த்துக் கொண்டியிருக்கிறேனே! கர்க்க மகரிஷி சொன்னது போல, என் மகனுக்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்தாள். கடைசியில் அவள் இறைவனைச் சரண் அடைந்தாள். தன் குழந்தையைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, பகவானிடம் சரண் அடைந்து, அவரை வேண்டிக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன இருக்கிறது? அறிவிற் சிறந்த யசோதை இந்த வழியைதான் பின்பற்றினாள். பகவான் கிருஷ்ணர் மாயை என்னும் வலையை அவள்மீது வீசிவிட்டு, தாம் மீண்டும் பழைய குழந்தையைப் போல அவள்முன் தோற்றமளித்தார். கனவு உடனே மறைந்துவிடுவது போல நடந்த விசியங்களை அத்தனையும் யசோதைக்கு மறைந்துவிட்டன. தாய்ப்பாசம் மேலிடவே குழந்தையைத் தன் மடியில் கிடத்தி, அதைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth