கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?


கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?

தற்போது கத்திரி வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக்கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றி விளக்குகிறார் கண் மருத்துவர் சித்தார்த்தன். கண்கட்டி என்பது கண்ணின் இமைப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகும். இது வலி மற்றும் கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். சில நேரம் இந்த கட்டிகள் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெயில் காலத்தில் கண்கட்டி பிரச்னை அதிகமாக இருக்கும்.

வெயிலில் அலையும் போது, உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கண்கட்டி உருவாகிறது. அழுக்குகள், தூசுகளாலும் இது ஏற்படலாம். சாலையில் செல்லும் போது தூசு, புழுதி முகத்தில் படிகிறது. கண்களிலும் தூசுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் கண்ணில் உடனே கிருமித்தொற்று உருவாகிறது. புழுதி, மண், புகை உள்ளிட்டவைகளுடன் உஷ்ணமும் சேர்ந்து கொண்டால் கண்ணில் கட்டிகள் எட்டி பார்த்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடல் உலர்ந்து போகிறது. கண்ணில் உள்ள கண்ணீர், விழிப்படலத்துக்கான ஈரப்பசையை கொடுக்கிறது.

வெயிலில் செல்லும் போது இந்த கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் புறஊதா கதிர்களின் தாக்கம் வெப்ப காலத்தில் அதிகமாக இருக்கும். அவையும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரமான குளிர்க்கண்ணாடிகளை  (கூலிங் கிளாஸ்)பயன்படுத்தலாம்.
வெயில் காலம் மட்டுமல்லாமல், எப்போது வெளியில் சென்றாலும் குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். பாதுகாப்பு முறை: வெயில் தலையில் பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் தடுக்க தொப்பிகள் அணிவது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் குடிநீரும் கையில் இருக்கட்டும்.

வெயிலால் கண் உலர்வு ஏற்படும் போது இந்த தண்ணீரால் கண்களை கழுவிக் கொள்ளலாம். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு கண் சொட்டுமருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். வெயிலில் சுற்றுபவர்கள் அடிக்கடி முகத்தையும் கண்களையும் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது கண்களில் தூசு படிவதையும், உலர்வதையும் தடுக்கும். கண்கள், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். கண்ணில் பிரச்னை வரும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

ரெசிபி

பாலக்பனீர்: 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கட்டு பாலாக்கீரையை 10 நிமிடம் வேக வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு பனீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாலக்கீரையில் வைட்டமின் ‘ஏÕ சத்து உள்ளது. பனீர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.

ராகிபழ அப்பம்: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், பொடியாக வெட்டிய 2 வாழைப்பழம் ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோசை பதத்தில் ஆப்பம் போல் சட்டியில் வார்த்து எடுக்கவும். இந்த இனிப்பு அப்பத்தில் நார்ச்சத்து உள்ளது. வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு குளிர்ச்சி.

பனீர் பொடிமாஸ்: இரண்டு கப் பனீரை ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அரை கப் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து தாளித்து வதக்கவும். இறுதியில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

பாட்டி வைத்தியம்

அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும்.

அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.

ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும்.

இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும்.

வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும்.

வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.

டயட்

தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth