லீலை கண்ணன் கதைகள்...49

லீலை கண்ணன் கதைகள்...49…கிருஷ்ணன் மதுராவுக்கு வருகை...
முதன்முறையாக கிருஷ்ணன், பலராமன், மற்றும் சில கோபியர்கள் மதுரா சென்று அடைந்தார்கள். அதனால் அவர்களுக்கு அனைத்தும் புதியதாக தோன்றியது. அந்த ஊரினை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர், அடுத்த நாள் காலை, நந்தரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, சுற்றி பார்க்க வெளியே சென்றனர். கிருஷ்ணனும் பலராமனும் ஊரை சுற்றி பார்க்க வந்த விஷயம் ஊர் முழுக்க பரவியது, மதுராவின் மக்களுக்கு முன்பே இவர்களை பற்றி தெரியும், அதனால் அவர்களை பார்க்க வேண்டும் என்று அனைவரும் விருப்பப்பட்டனர். தெருவின் ஓரம் அனைவரும் கூடினர், சிலர் மாடியின் மேலே சென்று இவர்கள் வருகைக்காக காத்துகொண்டு இருந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் வரும் சமயம் பார்த்து அனைவரும் பூக்கள் தூவ ஆரம்பித்தனர். இருவரும் சிங்க நடை போட்டு தெருக்களில் நடந்து வந்தனர்.
கிருஷ்ணனும் பலராமனும் வரும்போது எதிரில் ஒரு சலவைக்காரன் வந்தான், அவன் முதுகில் பெரிய துணி மூட்டையே இருந்தது. அவனை நிறுத்தி, ஐயா எங்களுக்கு உடுத்த சில துணிகள் கிடைக்குமா என்று கிருஷ்ணன் கேட்டான்.
அந்த சலவைக்காரன் கம்சனின் வேலையாளி, கிருஷ்ணனை பார்த்து "உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ அரசரின் துணிகளை கேட்பாய்? காட்டில் சுற்றுபவர்களுக்கு இந்த மாதிரி உடைகள் தேவையா? இதனை ராஜ பதவி உள்ளவர்கள் தான் அணிய வேண்டும். மூளை இல்லா முட்டாள்களே, உங்கள் உயிர் வேண்டும் என்றால் இதை மறந்துவிட்டு அப்படியே ஓடி விடுங்கள், இல்லையென்றால் அரச சேவகர்கள் உங்களை அடித்து விடுவார்கள்".
அந்த சலவையாளியின் பேச்சினை கேட்டு கோபமுற்ற கிருஷ்ணன், அவனை தலையில் அடித்தான், அந்த அடி பலமாக இருந்ததனால், அவன் அங்கயே விழுந்து இறந்தான். அவன் உடன் இருந்த மற்ற சலவையாளிகள் அவர்கள் வைத்து இருந்த மூட்டையை அங்கேயே போட்டு விட்டு தலை தெறிக்க ஓடினர். கிருஷ்ணனும் பலராமனும் மூட்டையை பிரித்து, அதில் உள்ள அழகிய ஆடையை எடுத்து உடுத்திகொண்டனர், மீதம் உள்ளதை கோபியருக்காவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.
அந்த தெருவில் ஒரு தையல்காரன் இருந்தான், அங்கு நடந்த அனைத்தையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அந்த இருவர் மீதும் அதிக மதிப்பினை வைத்திருந்தான், அவன் அவர்களை நோக்கி ஓடி, அவன் வைத்திருந்த சில ஆடைகளை கொடுத்து அதை ஏற்கும்படி கெஞ்சினான். கிருஷ்ணரும் பலராமரும் அதை வாங்கி உடுத்தி கொண்டனர். கிருஷ்ணர் அவனை பார்த்து "நீ மிக விரைவில் செல்வந்தன் ஆவாய், உனது மீதம் உள்ள வாழ்க்கை மிக்க சந்தோஷம் நிறைந்ததாக அமையட்டும்,
இறந்த பிறகு நீ வைகுண்டம் செல்வாயாக" என்று வாழ்த்தினான்.
கிருஷ்ணனுக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அடுத்து இருவரும் பூக்கடைக்காரனிடம் சென்றனர். சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் அங்கு வசித்து வந்தார், அவருக்கும் கிருஷ்ணன் பற்றிய கதைகள் தெரியும், கிருஷ்ணரும் பலராமரும் ஒன்றாக சுதாமா வீட்டுக்கு சென்றனர், இதை கண்ட சுதாமா, பெருமகழ்ச்சியுற்று அவர் இருவரையும் வரவேற்றார். அவர்கள் காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினார்.
பீடத்தில் அமர வைத்து அவர்கள் காலினை கழுவி, இருவரின் பாதத்திற்கும் மலர்களால் அலங்கரித்தார் சுதாமா. சுதாமா கண்ணிருடன் "பகவானே, உங்களை நேரில் பார்த்ததனால் நான் தூய்மை அடைந்தேன். உங்களது கட்டளையை கூறுங்கள், என்ன செய்ய வேண்டும்" என்று வினவினார். சுதமாவின் அன்பையும் பணிவையும் கிருஷ்ணன் புரிந்துகொண்டார். கிருஷ்ணர் சுதாமாவுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினார், "சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் உனக்கு அதை தந்து ஆசிர்வதிக்கிறேன்" என்றார் கிருஷ்ணன்.
ஆனால் சுதாமாவின் மனம் நிறைந்துவிட்டது, கேட்க எதுவும் இல்லாமல், கிருஷ்ணனை வணங்கி, "உங்கள் அழகு முகத்தை பார்த்தால் போதும் கிருஷ்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?, உங்கள் மீது இறுதி வரை நான் பக்தி வைத்து இருக்கவேண்டும். அனைத்து மனிதரிடத்தும் நான் கருணையோடு இருக்க என்னை ஆசிர்வதியுங்கள். இதுவே என்னுடைய ஆசையும்" என்றார். கிருஷ்ணரும் அவரின் ஆசையை ஏற்றுக்கொண்டு அவரை ஆசிர்வதித்தார்.
தொடரும்...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth