முடங்கிய காரியங்கள் முனைந்து நடக்கும் முருக்கம்பட்டு வேதபுரீஸ்வரர்:- தேனீ பாதுகாத்த மரகத லிங்கம்
*முடங்கிய காரியங்கள் முனைந்து நடக்கும் முருக்கம்பட்டு வேதபுரீஸ்வரர்:-*
*தேனீ பாதுகாத்த மரகத லிங்கம*்!!!
முருக்கம்பட்டு சின்னஞ்சிறு கிராமம். இங்கு முருகனின் திருவடி பட்டதால், முருகன் பட்டு என்ற பெயர் உருவாகி, அதுவே முருக்கம்பட்டு என்று மருவிவிட்டது.
பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் சிவாலயம் ஒன்று புராணத் தொன்மையைப் பறைசாற்றியபடி நின்றிருக்கிறது. பச்சைக்கல் என்று அழைக்கப்படும் மரகதக் கல்லினால் செய்யப்பட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அபூர்வ லிங்கம் இந்த கோயிலில் அருளாட்சி புரிந்து வந்திருக்கிறது.
ஏரிக்கரையின் ஓரமுள்ள அரச மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருந்தன. கோயில் மண்ணோடு மண்ணாக புதைந்தாலும், காற்று, தட்ப வெப்ப நிலைகள், மழை, வெள்ளம், புயல், புழுதி போன்ற இயற்கையின் சீற்றத்தினாலும் இந்த சிவலிங்கம் பழுதுபடாமல் இருந்தது.
மிகப்பெரிய காட்டுத் தேனீயின் பராமரிப்பில், பாதுகாப்பாக இருந்திருக்கிறது இந்த சிவலிங்கம். பிரமரம் என்றால் காட்டுத்தேனீ என்று பொருள். அதனால் அம்பாளுக்கு பிரமராம்பிகா என்ற பெயரும், ஈசனுக்கு சத்திய விரதேஸ்வரர் எனும் பெயரையும் சூட்டினார்கள்.சத்திய விரதேஸ்வரருக்கு நாக விமானம். அவருக்கெதிராக நந்திகேஸ்வரர். பிறகு கணேச மூர்த்தி, வள்ளி-தெய்வானையுடன் முருக்கம்பட்டு முருகன் மற்றும் கோஷ்ட தெய்வங்கள், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். அன்னை பிரமராம்பிகா தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தொண்டை மண்டலம் என்றழைக்கப்பட்டு தொண்டைமான் ஆட்சியில் செழித்த இவ்வூரை நோக்கி விஸ்வாசு என்ற அரக்கன் போர்புரிய வந்தான். உடனே வேதபுரீஸ்வரனை சரணடைந்தான் தொண்டைமான்.
நானே படைத் தலைவனாக வந்து வெற்றி அளிக்கிறேன் என்று ஈசன் வாக்களித்தான். இங்கு ஈசன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சதாசர்வகாலமும் நான்கு வேதங்களை ஓதிக்கொண்டும் அதன் பொருளை அவர்களுக்கு கூறிக்கொண்டும் இருக்கிறார்.
ஆகையினால் அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று நந்தி பகவான், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பார்த்து அமர்ந்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.இக்கோயிலின் வடகிழக்கு மூலையில் வெள்ளை மேடையில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ராகு-கேதுவுக்கு தனி பீடம் உள்ளது.
இங்கு பாலமுருகனின் கமலபாதம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்த முருகனை பரமேஸ்வரனும் பார்வதியும் சமாதானப்படுத்த இங்கு வந்தனர். கணபதிக்கு ஞானம் ஏற்பட்டதால் தம்பியாகிய உன்னை வெற்றி கண்டார் என்று கூறினாலும் முருகப்பெருமான் சமாதானமடையவில்லை. ஈசனும், அம்பாளும் இங்கேயே தங்கி விட்டனர்.
பிறகு முருகன் கோபம் தணிந்து திருத்தணிக்குச் சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சுற்று வட்டாரத்திலுள்ள பல குடும்பங்களுக்கு இந்த முருகன்தான் குலதெய்வமாக விளங்குகின்றான். தத்தம் குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கையை இங்குதான் அளிக்கின்றனர். இவர்களுக்கு சைவ&வைணவ பேதம் இல்லை.
முருக்கம்பட்டு ஊரை விட்டு நகர மாட்டேன் என்று சத்திய விரதம் எடுத்த சத்திய விரதேஸ்வரரையும் அவருடைய சத்தியத்திற்கு கட்டுப்பட்டு அவருடன் இணைந்து நின்ற பிரமராம்பிகையையும் வணங்கினால் தீராத நோய்கள் குணமாகின்றன; தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன; முடங்கிய காரியங்கள் முனைந்து நடக்கின்றன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு 5 கி.மீ. அருகில் உள்ளது இக்கிராமம்.
*என்றும் அன்புடன்*
*எம்சரவணக்குமார்@எஸ்கே*
*<எஸ்கே>தமிழ் இணையம்*
*மதுரை*
*வாட்ஸ் ஆப் எண்*
*9842171532*
Comments