கடந்த காலம் தெரியாதவர்களுக்கு நிகழ் காலம் புரியாது
காஞ்சிபுரம் அண்ணாத்துரைஅரசியலுக்கு வராமல் போயிருந்தால், பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருப்பார்
ராஜாஜி அரசியலுக்கு வராமல் போயிருந்தால்,சேலத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி பல திறமையான வழக்கறிஞர்களை உருவாக்கியிருப்பார்
காமராசர் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் விருதுநகரில் மிகப்பெரிய வர்த்தகராக பரிமளித்திருப்பார்
ராமச்சந்திரன் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் இறுதிக்காலம் வரை தமிழ்த்திரை உலகில் புரட்சி நடிகராகவே கோலோச்சியிருப்பார்
ஜெயலலிதா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் தமிழ்த்திரைப்படங்களில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழோடு இருந்திருப்பார்
ஓ.பி. பன்னீர்செல்வம் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பெரியகுளத்தில் தனது தேரீர்க்கடை வியாபாரத்தை கும்பகோணம் டிகிரி காபிக்கு இணையாக பிரபலமாக்கியிருப்பார்
ராஜாஜியை – காமராசரை – அண்ணாத்துரையை – ராமச்சந்திரனை – ஜெயலலிதாவை - பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவி வரை உச்சிக்கு கொண்டு போய் உட்கார வைத்தது
நம் தமிழ்நாடு
-----------------------------------------------------------
அண்ணாத்துரை இறந்துபோன போது கூடியகூட்டம் கின்னஸில் இடம் பெற்றது ஆனால் அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப்போனார்
நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்று கேள்வி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராசர் / சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திராவை அழைத்துவந்த காமராசர், கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் சொந்த ஊரான விருதுநகரில் தோற்றுப்போனார்
தென்னகத்தின் மார்லன் பிரான்டோ என்றுகொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜிகணேசன் சொந்த மண்ணான திருவையாறில் தோற்றுப்போனார்
“மிஸ்டர் ராஜீவ்காந்தி, எங்கே ஓடுகிறீர்கள்” என்று நாடாளுமன்றத்தில் நடுங்கக் கேட்ட வைகோ விருதுநகரில் தோற்றுப்போனார்
நாடு போற்றிய நல்லவர்களை சொந்த மண்ணிலேயே தோற்றுப்போக வைத்தது
நம் தமிழ்நாடு
-----------------------------------------------------------
ஒரு மணி நேரத்திற்கு பத்துலட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட “மை லார்ட்” என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீராசாமி, சிவகாசி வெயிலில் அலைந்ததற்கும்
கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க காற்று கூட குறுக்கிடமுடியாத பாதுகாப்புடன் ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்துவந்த உயர்நீதிமன்ற நீதிபதி சாமித்துரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப்போனதற்கும்
இந்திய அளவில் புகழ்பெற்ற பல்மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதோர்களையெல்லாம் பார்த்துச் சிரித்ததற்கும் இடம் கொடுத்தது
நம் தமிழ்நாடு
-----------------------------------------------------------
“அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவனுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன், அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான் " என்று சொன்ன கவிஞர் கண்ணதாசனும்
“அரசியல் என்பதே மூளையற்ற மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது” என்று சொன்ன எழுத்தாளர் ஜெயகாந்தனும்
திராவிடமொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனும்
அதிகாரவர்க்கத்திற்கு சிம்மசொப்பனமாக இருந்த எக்ஸ்ப்ரஸ் அதிபர் கோயாங்காவும்
திசை மாறிப் போனதற்கு காரணம்
நம் தமிழ்நாடு
-----------------------------------------------------------
கோடீஸ்வர ஏ.சி.ஷண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப்போனதும்
சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியன் நடிகை வைஜெயந்திமாலாவிடம் தோற்றுப்போனதும்
நல்லக்கண்ணு தேர்தலில் நின்றாரா இல்லையா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் தோற்றுப்போனதும்
நடிகர் ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும்
நம் தமிழ்நாட்டில்தான்
-----------------------------------------------------------
ஸ்டாலின் விஜயகாந்த் வைகோ அன்புமணி ஜி.கே.வாசன் என முதலமைச்சர் கனவு எல்லோருக்கும் உண்டு. அந்தக்கனவு இன்றுவரை சாத்தியமாகவில்லை
.
ஆனால் இப்படி யோசித்தாலே 120 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஒருமுறை அல்ல இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்
இதுவும் நம் தமிழ்நாட்டில்தான்
-----------------------------------------------------------
வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சராவார் என்று காத்திருக்க வெள்ளையனை வியக்கவைக்கும் அளவுக்கு பதவியை மறுத்த தியாகராயரும்
நான் பதவி விலக சம்மதிக்கிறேன் ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூர் ராமசாமி ரெட்டியும்
எனக்கு உடல்நலம் இல்லை முதலமைச்சர் பதவியெல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா வும்
ஒன்பது ஆண்டு கால முதலமைச்சர் பதவியை தூசியைப் போல் தட்டிவிட்டு வெளியேறிய காமராசரும்
உலாவியது
இதே தமிழ்நாட்டில்தான்
-----------------------------------------------------------
கடந்த காலம் தெரியாதவர்களுக்கு நிகழ் காலம் புரியாது..
Comments