தினம் ஒரு ஸ்லோகம்!!
தினம் ஒரு ஸ்லோகம்!! இராமாநுச நூற்றந்தாதி 20
ஆரப்பொழில் தென்குருகைப் பிரான் * அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் * இராமானுசன் எந்தன் மாநிதியே.
விளக்கவுரை - தாமிரபரணியின் நீர்வளத்தால் உயர்ந்து நிற்கும் சந்தன மரங்கள் குழ்ந்த சோலையினால் சூழப்பட்டது திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆகும். இத்தகைய திருக்குருகையில் அவதாரம் செய்து, அனைவருக்கும் திருவாய்மொழி அருளி, நாதமுனிகளுக்கு அனைத்னதயும் உபதேசம் செய்து, நமது ஸம்ப்ரதாயத்தை வழி நடத்தியவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் அழகான திருவாயில் பிறந்ததும், நமது ஸம்ஸார தாபம் நீக்கும் ஈரம் உள்ளதும், தமிழ்மொழியில் உள்ள வேதம் போன்றுள்ளதும் திருவாய்மொழியாகும். இப்படிப்பட்ட உயர்ந்த திருவாய்மொழியின் இசையை, அதன் ராகம் போன்றவற்றுடன் அறிந்தவர்களின் குணங்களில் நின்று, அவர்களுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும் கூறியபடி உள்ளவர் நாதமுனிகள் ஆவார். இப்படிப்பட்ட நாதமுனிகளை, அவரது குணங்களுடன் அனுபவித்தபடி உள்ளவர் எம்பெருமானானார் ஆவார். அப்படிப்பட்ட உடையவர், உலகில் உள்ள அனைவருக்கும் எற்ற செல்வமாக உள்ளபோதிலும், எனக்குக் கிட்டிய பெரியநிதி ஆவார். நவநிதி போன்று ப்ரளயத்தில் அழியக்கூடியது அல்லாமல், எப்போதும் உள்ள மாநிதி ஆவார்.
Comments