இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு

★குருவடி சரணம் ★

★இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.

★இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம்.

★அஸ்வமேதயாகம்★

★வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.

★வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.

★தங்கமலர் அர்ச்சனை★

★சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

★ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.

★வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..

★கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

★வேடனுக்கு மோட்சம்★

★ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.

★இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.

★ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம்.

★அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.

★கற்பக மூலிகையான வில்வம்★

★திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.

★வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.

★இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.

★சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

★ஓம் நமசிவாய ஓம் ★

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth