பீஷ்மர், சரமாரியாக அம்புகளை

பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. 'எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன்.

இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன்.

அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணி திவ்விய தேசத்தில்!
ஒருவேளை போர் முனைக்கு ஸ்ரீருக்மிணிதேவியும் வந்திருந்தால் என்னாகியிருக்கும்?

அவனுக்கு முன்னே நின்றபடி, அத்தனை அம்புகளையும் தடுத்திருப்பாள் தழும்புகள் இல்லாத கிருஷ்ண பரமாத்மாவாக இருந்திருப்பார், பகவான்!

ஸ்ரீருக்மிணிதேவி வராததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான்! அப்படி அவள் வராததால்தான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் தழும்பேறிய முக தரிசனம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

அர்ஜுனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிக்கொள்வான்; எதனையும் ஏற்றுக் கொள்வான் ஸ்ரீகிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் அல்லவா அது?!

ஒருகட்டம் வரை அமைதியாக இருந்து, அத்தனை அம்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்ட கண்ணன், அடுத்து அர்ஜுனனுக்கு பீஷ்மர் குறி வைத்தபோது, பொங்கியெழுந்தான். விறுவிறுவென தேரில் இருந்து இறங்கினான். பீஷ்மரை நோக்கி வேகம் வேகமாக நடந்தான். சட்டென்று அவன் கையில் சக்ராயுதம் சுற்றியது. 'ஆயுதத்தையே எடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே கிருஷ்ணா...' என்று எல்லோரும் கேட்பதாக ஒருகணம் தோன்றியது அவனுக்கு.

ஆனாலும், அவன் ஆயுதத்தை எடுத்தான்; சத்தியத்தை மீறினான். 'எனக்கு ஆபத்து வந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன். என் அடியவருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், ஆயுதம் எடுக்கவும் தயங்கமாட்டேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, உலகுக்கு உணர்த்தினான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் கண்ணபிரானுக்கு 'சூன்யஹ:' எனும் திருநாமம் அமைந்தது.

சூன்யஹ என்றால், ஒரு தீமையும் துர்க்குணமும் இல்லாதவன் என்று அர்த்தம். தீமைகளுக்கும் துர்க்குணங்களுக்கும் ஆட்படாதவன் என்று பொருள்.

ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது, அவருடைய அடியவர்களுக்கு அவன் தரும் முக்கியத்துவம் நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படி நமக்காக அவன் ஓடோடி வரவேண்டும் என்றால், நமக்காக அவன் எதையும் செய்யத் துணியவேண்டும் என்றால் நாம் காமத்துடன் இருக்கவேண்டும்.

காமம் என்றால் ஆசை என்று அர்த்தம். நாம் ஆசைப்படுவது முக்கியமில்லை; எவரிடம் ஆசை கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம். ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆசை கொண்டு இருப்பதே சிறப்பு. ஸ்ரீகிருஷ்ணப் பிரேமையுடன் இருந்தால்தான், எப்போதும் கிருஷ்ண கைங்கர்யத்திலேயே இருந்தால்தான், அவனுடைய பரிபூரண அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் பெறமுடியும். கண்ண பரமாத்மாவின் அருளும் ஆசீர்வாதமும் இருந்துவிட்டால் அறம், பொருள், வீடு என சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுவிடலாம்.

'பணிவிடை செய்வதைக் காட்டிலும் நிறைவான இன்பம் வேறு எதுவுமில்லை’ என்று ஸ்ரீராமனுக்குச் செய்யும் பணிவிடை குறித்து லட்சுமணன் சிலாகித்துச் சொல்கிறார். 'வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் (உடல்) இறைவனுக்குப் பணிவிடை செய்யவேண்டும்’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.

'வாயினாற் பாடி, மனத்தால் சிந்தித்து, தூமலர்த் தூவித் தொழுவேன்’ என்று ஸ்ரீஆண்டாளும் பாடுகிறாள். ஒவ்வொரு வரியிலும் உருகுகிறாள்; தன் உள்ளத்தை அப்படியே பதிவு செய்கிறாள்.

கிருஷ்ண பக்தியை, ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்டிருக்கிற பிரேமையை இப்படித்தான் நாமும் கொள்ளவேண்டும். எப்போதும், எந்த நேரத்திலும், எவ்விதமான சூழல் வந்திடினும் ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்டிருக்கிற பக்தியை விட்டுவிடவே கூடாது. பூலோகத்திலும் சரி... வைகுண்டத்திலும் சரி... நாம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்கு ஸ்ரீகிருஷ்ணர் மீது கொள்ளும் காதலே நமக்கு நல்ல நல்ல பலன்களை ஈட்டித் தரும்.

ஒரு பொருளின் மீதான ஆசையே நம்மை இந்த அளவுக்குத் தூண்டிச் செல்கிறபோது, ஸ்ரீகிருஷ்ணர் மீது நாம் வைத்திருக்கும் ஆசை, நம்மை எந்த இடத்துக்கு நகர்த்திக்கொண்டு செல்லும் என நினைத்துப் பாருங்கள்!

அதாவது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், முதலாவதாக அவர் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். 'நீதாம்பா எனக்கு எல்லாமே!' என்று சரணாகதி அடையவேண்டும். தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள... பக்தி பெருகும்; ஆசை அதிகரிக்கும்; பிரேமை பொங்கித் ததும்பும்.

'பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தூண்டும். 'கிருஷ்ண பகவான், எப்பேர்ப்பட்டவர் தெரியுமா?' என்று தெரிந்ததைப் பற்றி, எவரிடமேனும் விளக்கத் தோன்றும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கத் தோன்றும்.

'ஸ்ரீகிருஷ்ணரின் மகோன்னதங்களைச் சொன்னாலும் புண்ணியம்; சொல்லச் சொல்லிக் கேட்டாலும் புண்ணியம்; சொல்பவருக்கும் புண்ணியம்; கேட்டவர்க்கும் புண்ணியம்’ என்கிறது கீதை.

அதுவும் எப்படி? அந்தப் புண்ணியம் 21 தலைமுறைக்கும் போய்ச் சேருமாம்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth