மதிப்பெண்களில் சாதித்த மாணவி..!
Wednesday, 18 May 2016
படிப்பு எதற்காக?, மதிப்பெண்களில் சாதித்த மாணவி..!

செவித்திறன் இல்லாத பெண்ணை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிக மதிப்பெண்கள் பெற்று, அவர் சாதனை படைத்துவிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களில் மாநில அளவில் முதலிடத்தை காயத்ரி பெற்றுள்ளார். சென்னை சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தார். தமிழில் 156, பொருளியலில் 199, வணிகவியலில் 196, கணக்குப் பதிவியலில் 199, வணிகக் கணிதத்தில் 173 என 1000-க்கு 923 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்தப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு மொழிப் பாடம் மட்டுமேயாகும்.
பி.காம் படித்துவிட்டு, வங்கி அதிகாரியாகப் பணியாற்றுவதே விருப்பம் என்று சைகை மொழியில் காயத்ரி கூறினார்.
(செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஒரு மொழிப்பாடம் மட்டுமே. மொத்தம் 1000 மதிப்பெண்ணுக்கு மட்டுமே அவர்கள் தேர்வெழுதுவார்கள்.)
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இவரது பெற்றோர் பழனிச்சாமி- சிவகாமி ஆகியோர் விவசாயிகள்.
இதுகுறித்து பழனிச்சாமி கூறியது: முதல் குழந்தையான காயத்ரிக்கு செவித்திறன் குறைபாடு இருந்தது. மற்ற குழந்தைகளைப் போல் படிக்க வைத்தேன். வறுமையான சூழலில் செவித்திறன் குறைபாடுள்ள பெண் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டுமா என்று உறவினர்களும், நண்பர்களும் கேட்டனர்.
4 வயதில் கரூரில் உள்ள செவித்திறன் குறைபாடுடைய பள்ளியிலும், 9-ஆம் வகுப்பில் இருந்து சென்னையில் உள்ள பள்ளியிலும் படித்தார். அவருக்கு சிறு வயதில் இருந்தே விடுதி வாசம்தான். கேள்விகளுக்கு மதிப்பெண்களில் காயத்ரி பதில் அளித்துவிட்டார் என்றார்.
Comments