சுண்டைக்காயின் மருத்துவக் குணம்..!

சுண்டைக்காயின் மருத்துவக் குணம்..!

கசப்பான விசயங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசயமாக இருக்கு..

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத் தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth