மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்:ஆரணியைச் சேர்ந்தவர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த பெண்ணிடம் இருந்து நுரையீரல், கல்லீரல், கணையம், இதயவால்வு, கண் ஆகிய உறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
ஆரணியை அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு, நெசவுத் தொழிலாளி. இவர், மனைவி சரண்யா (25) , மகன் லோகேஷ் (6), மகள் பூஜா (3) ஆகியோருடன் ஆரணிக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், 4 பேரும் கீழே விழுந்தனர். இதில், சரண்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனந்தபாபுவும் குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யா, தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யாவுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது நுரையீரல், கல்லீரல், கணையம், இதய வால்வு, கண் ஆகிய உறுப்புகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன.
Comments