கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? Facebook Twitter Pinterest Mail Whatsapp Pocket நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது. கேழ்வரகிலுள்ள சத்துக்கள் என்னென்ன என்பதைக் கூறி, கேழ்வரகு சாப்பிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது இந்த பதிவு! டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா: கேப்பை, கேழ்வரகு, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் ராகி, நம் தேசத்தின் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம். எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. தமிழ் நிலத்தோடும், கலாச்சாரத்தோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு! கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ நம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை. “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி!” என காவிரி பாயும் சோழர் பகுதிகள் கொண்டாடிய முப்போக விளைச்சலை, நம் தாத்தாக்கள் செய்தார்கள், நம் அப்பாக்கள் கண்டார்கள், நாம் கேள்விப்பட்டோம்! ஆனால் நம் அடுத்த சந்ததியோ தம் வரலாற்று புத்தகங்களில் படித்துக் கொண்டும், மீத்தேன் எரிவாயுவை சுவாசித்துக் கொண்டும், அதனடியில் கிடைக்கப் போகும் பெட்ரோலைக் குடித்து வாழ்வார்களோ என்னவோ! இது தனிக் கதை! ஆனால், காவிரி போல் ஆற்றுப் பாசன வசதியற்ற நிலப்பரப்பில், வறட்சி காலத்தில் தாக்குப்பிடித்து மிக சொற்ப நீர் வசதியிலேயே வளரக்கூடியவையும், பூச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாதவையுமான சிறுதானியங்கள்தான், விவசாய சமூகமாய் நாம் வாழ்ந்த காலத்தில், பெரும்பான்மை மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் இயற்கைகொடுத்த இன்சூரன்ஸ்! ஏன் சிறுதானியங்கள்? சர்க்கரை, கொலஸ்டிரால், BP, இருதயம், கேன்சர் என பல லைஃப் ஸ்டைல் நோய்களால் விரட்டப்படும் ‘நியு ஏஜ்’ இந்தியனுக்கு சிறுதானியங்களின் தேவை இரு மடங்காகி இருக்கிறது. ஏனெனில், அரிசிமணி பெரும்பாலும் பாலிஷ் செய்யப்பட்டு ஒரு சர்க்கரை சக்கையாகவே கிடைக்கிறது. ஆனால், அளவில் சிறிய இந்த சிறுதானியங்களை பாலிஷ் செய்வது கடினம், அதனால் இவற்றின் ஊட்டச்சத்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், பூச்சிக் கொல்லிகளின் தேவை இவற்றிற்கு இல்லை ஆதலால், கெமிக்கல் அபாயம் இந்த மண்ணுக்கும் இல்லை, உண்ணும் நம் உடலுக்கும் இல்லை. அந்த அதிசய சிறுதானியங்களில் இன்றும் நம்மோடு பரவலாய் புழக்கத்தில் உள்ள கேழ்வரகு ஒரு சாம்பியன் உணவுதான் என்பதற்கு கீழிருக்கும் ஊட்டச்சத்து அட்டவணை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (பார்க்க அட்டவணை) எனவே, அரிசியை விட குறைந்த சர்க்கரைச் சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், உண்டபின் இரத்தத்தில் சர்க்கரை அளவை ‘டபுக்’ என ஏற்றாமல், மிக சீராக ஏற்றும் தன்மையுடைய (Low Glycaemic Index Food), நல்ல உணவு ராகி. இருப்பினும் கூழாய் குடிக்காமல், களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு. சிலருக்கு ‘க்லூடன் அலர்ஜி’ என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், ‘க்லூடன்’ இல்லாததால், ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் 1200 மாத குழந்தை வரை (100 வயசு தாத்தாவும் குழந்தைதானேங்க!) எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் உண்டென்றால், அது சூப்பர் ஃபுட் தானே! அதனால்தான் என்னவோ, நம் வழக்கில் உள்ள இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பக்கோடா, இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகையுள்ளதோ அத்தனையிலும் ராகியை பயன்படுத்துவது மிக நன்மை. 6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுத் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, கூழ் செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம். எந்த ஒரு Tin food ஐ விடவும் மிகச் சிறந்த, விலை குறைந்த ஒரு Baby Food! தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள்! தோனியும், விராத் கோஹிலியும் ‘சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ எனவும், ஒரு கண்ணியமான தாய்க்குலம், ‘என் எலும்பைக் காப்பது இந்த வுமென்ஸ் ட்ரிங்க்தான்’ எனவும் உங்கள் வீட்டு தொலைக்காட்சியில் ராகியைக் காட்டி கூவ வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வீட்டுத் தட்டில் என்ன விழ வேண்டும் என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளை நிர்ணயிக்க விடாதீர்கள்! உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய அறிவியல். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். இதே போல், மேலும் பல பாரம்பரிய வழக்கங்களில் மனித வாழ்வின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அறிவியல் பொதிந்திருக்கலாம். பொத்தாம்பொதுவாய், அவற்றை ‘நான்சென்ஸ்’ என ஒதுக்காமல், அவற்றிற்குரிய கவனம் கொண்டு, சார்பு அற்ற, நடுநிலையான, திறந்த மனதுடன் அவற்றை நாம் ஒவ்வொருவருமே சீர்தூக்கி அணுகுவது அவசியம். நம் பொக்கிஷங்களை காப்பது நம் கடமையெனில், நம் பாரம்பரிய வாழ்வறிவும் பொக்கிஷம்தான். அவற்றைக் காப்பதும் நம் கடமைதான்!! குறிப்பு: சாமை, வரகு, தினை, குதிரைவாலி முதலிய பிற சிறு தானியங்கள் அனைத்தும் ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.

Read more at : கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? http://isha.sadhguru.org/blog/ta/kezhvaragu-sappiduvathal-undagum-nanmaigal-ennenna/

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth