கண்ணன் கதை
கண்ணன் கதை
ஆக்ராவுக்கு சமீபத்தில் இருக்கும் மதுராதான் பகவான் கிருஷ்ணர் பிறந்த ஊர். மிகச் சிறியதான சிறைச்சாலைக்கு மேல் ‘கத்ர தேஷவ் தேவ்’ என்ற கோயில் எழுப்பியுள்ளனர். கீழேயுள்ள சிறைச்சாலையில்தான் கிருஷ்ணர் அவதரித்தார். மதுரா-பிருந்தாவன் சாலையில் கிராமந்திர் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணரின் அதி அற்புத சிலை உள்ளது. மதுரா, ராமாயண காலத்தில் சத்ருக்னனால் உருவான ஊர். கண்ணன் வாழ்ந்த கோகுலத்தை வடமதுராவிலிருந்து 5 கி.மீ. சென்று, யமுனா நதி பாலத்தைக் கடந்தால் அடையலாம். பகவானின் தசாவதாரங்களில் எட்டாவது, கிருஷ்ண அவதாரம். வசுதேவர்-தேவகிக்கு 8வது குழந்தை.
திதிகளில் 8வது திதி, அஷ்டமி. திருமாலின் மூலமந்திரம், எட்டெழுத்தான ‘ஓம் நமோ நாராயணா’.
‘‘எட்டினால் எல்லாமே கிட்டும். எட்டினால் கிட்டாததே கிடையாது’’ என்றார், சுவாமி தேசிகன். யது வம்சத்தில் போஜ குலத்தில் பிறந்த உக்ரசேனன் மகன், கம்சன். இவன் வடமதுரையை ஆண்டு வந்தான். கம்சனுக்கு கம்சை, தேவகி என இரு சகோதரிகள். தேவகி மீது கம்சன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான்.
மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து தன் ரதத்திலேயே மணமக்களை ஊர்வலமாக அழைத்து வந்தான். அப்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது: ‘‘தேவகியின் 8வது பிள்ளை உன்னைக் கொல்வான்.’’
உடனே கம்சன் ஆத்திரமுற்று தங்கை தேவகியை கொல்ல முயன்றான். வசுதேவர் தடுத்து ‘‘இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். அந்தக் குழந்தைகளை நீயே கொன்றுவிடு; இப்போது இவளை விட்டுவிடு’’ எனக் கூறினார். அதனால் கம்சன் அவ்விருவரையும் சிறையில் அடைத்தான். பிறந்த 6 குழந்தைகளையும் அவனே ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்றான். 7வது குழந்தையாக ஆதிசேஷ அம்சம் கருவில் தங்கியது.
யோக மாயையால் 7ம் மாதம் அக்கரு வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தது. தேவகியின் கரு 7ம் மாதத்தில் கலைந்து விட்டது எனக் கூறிவிட்டனர். 8வது குழந்தைக்காக கம்சன் காத்திருந்தான்.
வசுதேவர்-தேவகிக்கு, கிருஷ்ணருக்கு முன் பிறந்த 6 குழந்தைகளும் ஒரு சாபம் காரணமாகவே கம்சனால் அழிக்கப்பட்டன. அதாவது மாகி முனிவருக்கும் ஊர்மிளைக்கும் பிறந்து பிரம்மனால் சபிக்கப்பட்டதால் வசுதேவர்-தேவகிக்குப் பிறந்து சாபப்படி கம்சனால் கொல்லப்பட்டு சாப விமோசனம் பெற்றனர். ஸ்மரன், உத்தீதன், பரிஷ்வங்கன், பதங்கன், க்ஷித்ரபிருத், இருணி ஆகியவர்களே அந்த குழந்தைகள். 7வது குழந்தையாக ஆதிசேஷனே பலராமனாக பிறந்தது. பின் 8வது குழந்தையாக திருமால், கண்ணனாக அவதரித்தார்.
பரந்தாமன் அவதரித்தவுடன் அக்குழந்தை கோகுலத்தில் இருந்த நந்தகோபரின் மனைவி யசோதையிடம் அளித்து, அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டுவந்து சேர்த்தார் வசுதேவர். இந்த மாய நிகழ்ச்சியை அன்றிரவு யாரும் அறியாவண்ணம் கண்ணனே நிகழ்த்தினார். பிறந்த உடனேயே கண்ணன் வசுதேவர்-தேவகிக்கு, நாராயணனாக, நான்கு கரங்களுடன் காட்சி தந்து, பேசி, கிருஷ்ணனாக வந்திருக்கும் தான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டு, மீண்டும் குழந்தையாகி கோகுலம் செல்ல உதவினார். அந்த நள்ளிரவில் கண்ணன் பிறந்தபோது விழித்திருந்தவர்கள் 3 பேர்தான் வசுதேவர், தேவகி, கண்ணன். அதனால் கோகுலாஷ்டமி இரவில் விழித்திருப்போருக்கு கிருஷ்ண தரிசனம் கிட்டும் என்பது ஐதீகம்.
அதனால் கிருஷ்ண ஜன்மபூமியான மதுராவில் இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்கிறார்கள். முந்தைய ஒரு பிறவியில் வசுதேவர், சுதபஸ் என்ற பிரஜாபதியாகவும், தேவகி, ப்ருக்னி என்ற பக்தையாகவும் வாழ்ந்த காலத்தில், திருமாலே தங்களுக்கு மகவாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் மேற்கொண்டனர். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றித் தந்த பிறகும், தங்களுடைய குழந்தை மகாவிஷ்ணுதான் என்பதை அவர்கள் உணரவில்லை. அடுத்தது, அவர்களே கஸ்யபராகவும் அதிதியாகவும் பிறந்தனர். அவர்களுக்கு, மகாவிஷ்ணுவே வாமனனாகப் பிறந்தார்.
அப்போதும் அவர்கள் திருமால் பெருமையை உணரவில்லை. அதற்கடுத்த இந்த ஜன்மத்தில் வசுதேவர்-தேவகியாக பிறந்தனர். இப்போதும் திருமால் கண்ணனாக அவர்களுக்கு பிறந்தார். இப்பிறவியிலாவது அவர்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் சுயரூபத்தைக் காட்டி, புரியவைத்தார், குழந்தை கண்ணன். இப்படி பிறந்த கண்ணன் இங்கு வளராமல் ஆயர்பாடியில் வளர இரு காரணங்கள் உண்டு. ஒன்று கம்சனைத் தானே வதைக்க வேண்டும் என்பது ஒன்று; இரண்டாவது மகாவிஷ்ணுவே தங்களுக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பிய துரோணரும் அவர் மனைவி வசுமதியும் இந்த ஜன்மத்தில் நந்தகோபன்-யசோதையாகப் பிறந்து அந்தப் பெருமாளையே மகனாக வளர்க்கும் பெரும் பாக்கியம் பெற்றனர். சிறைச்சாலையில் மாயை அகன்றது. குழந்தை
அழுகுரல் கேட்டது. கம்சன் ஓடி வந்தான் 8வதாகப் பிறந்தது ஒரு பெண் குழந்தை என்று தெரிந்தும் அதனை அழிக்க முற்பட்டான்
அப்போது அப்பெண் குழந்தை... காளியாகி, அவன் கையிலிருந்து தப்பித்து வானில் சென்று, ‘‘உன்னைக் கொல்ல பிறந்தவன் வேறு இடத்தில் வளர்கிறான்’’ எனக்கூறி மறைந்தது.தன்னைக் கொல்லப் பிறந்த 8வது குழந்தை ஆயர்பாடியில் உள்ளான் என அறிந்து கொண்ட கம்சன் தன்னுடன் இருந்தவர்களிடம், ‘‘நீங்கள் எந்த வடிவில் சென்றாவது, எப்படியாவது கோகுலம் சென்று அவனை அழித்து விடுங்கள்’’ எனக் கூறி, அனுப்பினான். பூதனை என்ற அரக்கி, கிருஷ்ணனுக்குப் பாலூட்டி கொல்ல வந்தாள். அவளுடைய சகோதரன் பகன் கொக்கு வடிவில் வந்தான். ஆகாசுரன் மலைப் பாம்பாக வந்தான். தேனுகாசுரன் கழுதையாக வந்தான்.
பிரப்பலன், வியோமன் இருவரும் இடைச்சிறுவர்களாக வந்தனர். சகடன், வண்டிச் சக்கரமாக வந்தான்.
அரிஷ்டன், காளையாகவும், கேசி, குதிரையாகவும் அடுத்தடுத்து வந்து கண்ணனைக் கொல்ல முயன்று, கண்ணனாலேயே கொல்லப்பட்டனர். இத்தனை பேர்களாலும் கண்ணனைக் கொல்ல முடியவில்லை என்பதை அறிந்த கம்சன் பெருங்கோபம் கொண்டான். தன் அமைச்சன் அக்ரூரரை அழைத்து நந்தகோபரையும் குழந்தைகளையும் அரண்மனைக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தான். குவலயாபீடம் எனும் யானையைத் தயார் செய்து கண்ணனைக் கொல்ல ஏற்பாடுகள் செய்தான். ஆனால் பாலகன் கண்ணனோ, யானையின் தந்தத்தை ஒடித்து அதை அடக்கி, அரண்மனைக்குள் சென்றான். வழியில் கம்சனின் பணிப்பெண் த்ரிவக்கரை என்னும் கூனி, கண்ணனுக்கு உயர்வான வாசனை சந்தனம் அளித்து வரவேற்று அடிபணிந்தாள். கண்ணன் அவள் கூனை நிமிர்த்தி அவளை ஒரு பேரழகியாக மாற்றினார்.
உள்ளே சென்ற கண்ணன் மற்றும் பலராமரை சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசவன் போன்ற மல்யுத்த வீரர்களை ஏவிக் கொல்ல ஏற்பாடு செய்தான் கம்சன். இதுதான் இறுதி ஏற்பாடாகிவிட்டது. இரு பாலகர்களும் மல்யுத்த வீரர்களைக் கொன்றனர். இது கண்டு ஆத்திரமடைந்த கம்சன் வீரர்களிடம், ‘‘இந்த இரு சிறுவர்களையும் கொல்லுங்கள். சிறையில் இருக்கும் வசுதேவர், தேவகியையும் கொன்று விடுங்கள்’’ எனக் கூவினான். இதனால் கோபமுற்ற கண்ணன் கம்சனைப் பிடித்திழுத்து மகுடத்தை தட்டிவிட்டு தரையில் வீழ்த்தினான். அவன் தலையை தரையில் மோதினான். அவன் மீது ஏறி நின்று குதித்தான். பின் கம்சனைக் கொன்றான். மக்கள் மனம் மகிழ்ந்தனர்.
உடனே கண்ணன் சிறைச்சாலைக்குச் சென்று வசுதேவர், தேவகி, கம்சனின் தந்தை உக்ரசேனர் (தாத்தா) ஆகியோரை விடுவித்தான். அவர்கள் கண்ணனுக்கும்
பலராமனுக்கும் உபநயனம் செய்வித்தனர்; குருகுலம் அனுப்பினர். இவர்களின் குரு சாந்தீபினி ஆவார்.
அவரிடம் கண்ணனும் பலராமரும் 64 கலைகளையும் பயின்று தேர்ச்சி பெற்றனர். பின் குரு தட்சிணை என்ன வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு குரு ‘‘என் மகன் கடலில் விழுந்து விட்டான். அவனை மீட்டுத் தாருங்கள்’’ என கேட்டார். இருவரும் சமுத்திர ராஜனிடம் சென்று குருவின் மகனைக் கேட்டனர். அவரோ யமனிடம் சென்று கேட்கச் சொன்னார். யமலோகம் சென்று மகனை மீட்டு குருவிடம் ஒப்படைத்து ‘குருதட்சணை’யாகத் தந்தனர், சகோதரர்கள் இருவரும். அதன்பின் கிருஷ்ணருக்குத் திருமணம் நடைபெற்று, பிள்ளைகள் பிறந்தனர். யுத்தகளமான குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்தார். பின் பாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி பெற செய்து விட்டு கண்ணன் துவாரகை சென்று அரசாண்டார். அதன்பின் கிருஷ்ணாவதாரம் முடிந்தபின் திருமால் வைகுந்தம் சென்றார்.
திதி தேவதைகள் அஷ்டமியும் நவமியும் ஒருசமயம் திருமாலிடம் சென்று ‘‘எங்களை எல்லோரும் ஆகாத திதி என ஒதுக்குகின்றனர்’’ எனக்கூறி வருந்தின. உடனே திருமால், ‘‘கவலைப்படாதீர்கள்; உங்களையும் யாவரும் மதிக்கும்படி செய்கிறேன்’’ எனக்கூறி அனுப்பினார். அதன்படி திருமால் நவமி திதியில் ராமாவதாரம் செய்து ராம நவமி கொண்டாட வைத்தார். கிருஷ்ணனாக அஷ்டமி திதியில் அவதாரம் செய்து கோகுலாஷ்டமி கொண்டாட வைத்தார்.
Comments