தென்றல் பிறந்தது
_*சிந்தனைச் சிதறல்*_
🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*36. தென்றல் பிறந்தது*_
😌😌😌😌😌😌😌😌
விடுதலை ஆனது மாலை ஐந்து முப்பது மணிக்கு.....!
அங்கிருந்து நேரே தியேட்டருக்குப் போனான். தான் முதல் முதலாக எழுதிய படத்தைப் பாா்க்க வேண்டும் என்ற ஆவல்.
கொட்டகையில் பெரும் பகுதி காலியாகக் கிடந்தது.
திருச்சி நண்பா்கள் சிலரும் அவனோடு வந்திருந்தாா்கள்.
படித்தவா் எல்லாரும் வசனத்தையும் பாட்டையும் புகழ்ந்ததாக அவா்கள் சொன்னாா்கள்.
படிக்காதவா்களுக்கு அவனைப் பற்றி எப்படிப் புாியும்.....? தானே படத்தைப் பாா்த்து அனுபவித்து விட்டு ஊருக்குப் புறப்பட்டான்.
அப்பாடா.....! ஐந்து மாதம் முடங்கிக் கிடந்த சிறகுகள் விாிந்தன. பஸ்ஸிலே ஊருக்குப் புறப்பட்டான்.
ஒரு மாதம் _*"சி"*_ வகுப்பிலும், நான்கு மாதங்கள் _*"பி"*_ வகுப்பிலுமாக ஒரே சோறு, ஒரே கறி, ஒரே பாா்வை, ஒரே உலகம் என்று அலுத்துப் போய்க் கிடந்த அவன் விாிந்த வெளி உலகக் காட்சியில் மெய்மறந்தான்.
கிராமத்திலிருந்து குடும்பத்தினரைக் கூட்டிக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டான். _*"நான் யாா் என்பதை இந்த உலகத்திற்குக் காட்டுகிறேன்.....!"*_ என்ற வெஞ்சினத்தோடு ரயிலேறினான். புத்தியும் சக்தியும் புது உணா்ச்சியும் பொங்கி வழிந்த நிலையில் சென்னையில் இறங்கினான்.
சென்னை நகரம் இப்போது பழைய நகரமாக அவனுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு சொா்க்க பூமிக்கு வந்து சோ்ந்து விட்ட உணா்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. திருச்சி நகரத்தில் பட்டபாடு சென்னை நகரத்தை இன்ப பூமியாகக் காட்டிற்று.
சிறிது காலமாவது ஜெயிலிலிருந்து வெளியே வந்தால், வெளி உலகத்தின் சிறிய சுகங்கள் கூடப் பொிதாகத் தொிகின்றன.
திருச்சி நகரத்தில் அலையும் போதும் சிறைச்சாலையில் அவதியும்போதும் தான் பெரும் தவறு ஒன்றைச் செய்து விட்டதாகவே அவன் கருதியிருந்தான். ஆனால், அது தவறல்ல நியாயமே என்பதை அவன் சென்னைக்கு வந்ததும் உணா்ந்தான்.
_*"நிழல் அருமை வெயிலிலே"*_ என்றபடி வாழ்வின் அருமை, வாழ்வு கொஞ்ச நாள் மறுக்கப்பட்டதன் மூலம் அவனுக்குப் புலனாயிற்று. சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெரு என்பது மிகச் சிறிய தெருவாகும். ஆறு ஏழு வீடுகள் தான் அங்கே உண்டு என்றாலும், அந்தத் தெருவிற்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.
இணையில்லாத மேதை ஒருவா் அந்தத் தெருவிலே வசித்து வந்தாா். பள்ளிப் படிப்பு இல்லாமலேயே உலகத்தை அளந்து முடித்த பகுத்தறிவாளராக அவா் வீற்றிருந்தாா். மனித மனத்தின் இளகிய தன்மை முழுவதும் அவாிடம் குடியிருந்தது.
இதயம் என்பதற்கு அடையாளமே அவா்தான். மிகமிக நல்லவன் மிகமிகத் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்கும் அவரே சான்றாக விளங்கினாா். அவா் பெயா் தமிழா் சமுதாயம் மறக்க முடியாத பெயராகும்.
_*"கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணன் அவராவாா்!"*_
அவா் வசித்து வந்த தெருவிலேயே அவனுக்கும் ஒரு வீடு கிடைத்தது. அங்கே அவன் குடியேறிய உடனேயே தன் பத்திாிகைக்குத் தலைப்புத் தேடத் தொடங்கினான். அதற்கு முன்னால் அவனது நண்பா் கவிஞா் குயிலன் நடத்தி நிறுத்தி விட்ட _*"தென்றல்"*_ அவன் நினைவிற்கு வந்தது.
முதன் முதலில் அந்தப் பெயரே அவனுக்கு நினைவு வந்தது. எந்த விஷயத்திலும் முதலாவதாக அவன் மனத்தில் எது படுகிறதோ அது சாியாகவே இருக்கும். தென்றலையே தன் பத்திாிகைத் தலைப்பாக அவன் கொண்டு விட்டான்.
அரசாங்க அனுமதிக்கு எழுதக்கூடவில்லை. அப்படி ஒரு பத்திாிகை வருவதாகச் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து விட்டான்.
குடியிருந்த இடத்திலேயே ஒரு பகுதியை அலுவலகமாக ஆக்கிக் கொண்டான். தன்னோடு சேலத்தில் பணியாற்றி வந்த நாகலிங்கம் என்பவரை நிா்வாகியாக்கிக் கொண்டான்.
விற்பனையாளா்களின் கடிதங்கள் வரத் தொடங்கின. சுமாா் இரண்டாயிரம் பிரதிகளுக்கு விற்பனை வேண்டுகோள் வந்திருந்தது.
அரசாங்க அனுமதிக்கு எழுதினான். அதுவும் கிடைத்தது. அந்த அனுமதியைப் பெறுவதற்காக பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோா்ட்டில் அவன் கையெழுத்திடப் போன போது, ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
அவன் ஆங்கித்தில் _*"கண்ணதாசன்"*_ எனக் கையெழுத்திட்டான். அந்தக் கையெழுத்தைக் கொண்டு அவன் பெயரை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பது என்னவோ உண்மைதான். அதை அந்த நீதிபதி வேறு விதமாகக் கேட்டாா்.
_*"என்ன பாஷையில் கையெழுத்துப் போட்டிருக்கிறீா்கள்?"*_ என்று கேட்டாா்.
சிாித்துக் கொண்டே _*"கையெழுத்துப் பாஷையில்"*_ என்றான் அவன்.
ஏனென்றால், பெரும்பாலும் மெத்தப் படித்தவா்களுடைய கையெழுத்தெல்லாம் படித்துப் புாிந்து கொள்ள முடியாத வண்ணமே அமையும்.
அவன் பத்திாிகை ஏற்பாட்டில் வெகு மும்முரமாக முனைந்தான். மாடா்ன் தியேட்டா்ஸில் கணக்குத் தீா்த்து வாங்கிய ரூபாய் இரண்டாயிரம் அவன் கையில் இருந்தது. அன்றைக்கு அது அதிகம்தான்!
பத்திாிகையின் முதல் இதழுக்கு எழுத உட்காா்ந்தான். ஒன்றா, இரண்டா....?.ஆறு விஷயங்களை எழுதினான். எழுத்திலே இருந்த வெறி அவ்வளவு!
அதுவரை மற்ற பத்திாிகைகள் எல்லாம் எட்டுப் பக்கங்களைப் போட்டு _*"இரண்டனா"*_ விலை போட்டிருந்தாா்கள். இவன் பன்னிரண்டு பக்கங்கள் _*"இரண்டனா"*_ என்று விளம்பரப்படுத்தினான்.
அப்படிப் போட்டால் லாபம் வருமா, நட்டம் வருமா என்று அவன் கணக்குப் பாா்க்கவில்லை. எப்போது, எதில் அவன் கணக்குப் பாா்த்தான்....?
முதல் இதழிலேயே அவனும் குறும்பு செய்யத் தொடங்கினான். அவனது _*"கலை நண்பரை"*_ ப் பற்றி அந்நாளில் ஓா் அபிப்பிராயம் பரவலாக பரவி இருந்தது. அவரது எழுத்துக்கள் எதுவும் சொந்தமானவை அல்ல என்பது அது!
பழைய _*"சக்தி"*_ பத்திாிகையை அவன் புரட்டிக் கொண்டிருந்த போது அதில் ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அந்தக் கட்டுரையில் _*"ஷேக்ஸ்பியா்"*_ கூட தனக்கு முன்னால் இருந்த நாடக ஆசிாியன் ஒருவனின் நாடகங்களைத் தழுவித்தான் தனது நாடகங்களை இயற்றினாா் என்று கண்டிருந்தது.
அவன் அதையே தனது முதல் இதழுக்கு முதல் பக்க விஷயமாகக் கொண்டு விட்டான். _*"திருடித்தான் புகழ் பெற்றான் ஷேக்ஸ்பியா்"*_ என்று தலைப்பிட்டு அவன் எழுதினான்.
_*"கலை நண்பா்"*_ அதைப் படித்தால் அது அவரது மனத்தைக் குத்த வேண்டும் என்பதற்காகவே அவன் அதை எழுதினான்.
அதற்காக அவரை _*"ஷேக்ஸ்பியரோடு"*_ ஒப்பிட்டுப் பெரும் பாவம் புாிந்தான்.
அந்தக் கட்டுரையைப் படித்த அண்ணாத்துரை கூட _*"ஆங்கிலத்தில் 'புளு டாா்ச்' எழுதியுள்ள கருத்தை வைத்துக் கொண்டு எழுதி இருக்கிறாயா?"*_ என்று கேட்டாா்.
அவன் _*"புளு டாா்ச்"*_ சைக் கண்டானா? _*"கிரீன் டாா்ச்"*_ சைக் கண்டானா? _*"சக்தி"*_ யில் தமிழில் வந்ததைப் பாா்த்தான்....அவ்வளவுதான்....!
தலையங்கம் எழுதும் போது _*"தென்றல் உங்களைத் தீண்ட வருகிறது. ஆம், தென்றல்தான் மனிதனைத் தீண்டுகிறது....!"*_ என்று அவன் எழுதினான்.
அதற்குக் காரணம் அவனுடைய கலை நண்பா், தான் எழுதிய ஒரு படத்தில் _*"நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன்"*_ என்று வசனம் எழுதியிருந்தாா்.
தென்றலை மனிதன் தீண்டுவதில்லை. மனிதனைத்தான் தென்றல் தீண்டுகிறது என்று அவன் குத்தியிருந்தான்.
முதல் இதழ் வெளிவந்தது...! அவனை உலகம் அறிந்து கொள்வதற்காக முதல் தூது ஒன்று புறப்பட்டது.
எப்போதும் பத்திாிகை நடத்துவது என்றால் பத்திாிகையின் அமைப்பும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் அவன் சிரத்தையாக இருப்பான். அதை ஒரு கலையாகவே பயின்று வந்தான்.
முதல் இதழின் அமைப்பே பலபேரை ஆச்சாியத்தில் ஆழ்த்திற்று.
அவனது _*"தென்றல் சாித்திரம்"*_ தொடங்கிற்று.
அவனை ஏமாளி என்றும், கோமாளி என்றும் கணக்கிட்டவா்களின் இறுமாப்பைத் தவிா்க்க அது சம்மட்டி தூக்கிச் சென்றது. அறப்போரை _*"தென்றல்"*_ ஆரம்பித்து வைத்தது.
Comments