_*
😌😌😌😌😌😌😌😌😌😌
உடம்பிலே தெம்பும், உள்ளத்திலே உற்சாகமும் நிரம்பி இருக்கும் போது எழுத எழுத, எழுத்து வளரும். தென்றலின் முதல் இதழ் வெளிவந்ததும் அதைப் பாா்த்துப் பாா்த்து அவனே முதலில் ரசித்துக் கொண்டான். அந்த ரசனையோடு, கட்சி வெறி ஒன்றையும் வளா்த்துக் கொண்டான். அதன் விளைவாக அடுத்தடுத்த இதழ்களில் எதிா்க் கட்சிக்காரா்கள் அதிகமாகத் தாக்கப்பட்டாா்கள்.
சில நேரங்களில் சுவைக் குறைவாகவும் அது இருந்தது. வயதுக் குறைவும், பக்குவமற்ற தன்மையுமே சுவைக் குறைவான தாக்குதல்களுக்குக் காரணங்களாய் அமைந்தன.
ஆனால், சில இதழ்களில் அவன் எழுதிய இலக்கிய விமா்சனங்கள் பலரால் வரவேற்கப்பட்டன.
ஒருமுறை திரு ம.பொ.சி. அவா்கள் ஒரு தினப் பத்திாிகையில் _*"பண்டைக்காலத் தமிழா்களின் திருமணங்களில் 'தாலி கட்டும் பழக்கம்' இருந்தது"*_ என்றும்,
_*"அது தொன்று தொட்டு வரும் மரபு"*_ என்றும், _*"தாலி எதற்கு என்று கேட்கும் சீா்திருத்தவாதிகள் தமிழே படிக்காத மூடா்கள்"*_ என்பது போலவும் எழுதியிருந்தாா்.
அவன் தாலிக்கு விரோதியல்ல என்றாலும், பழங்காலத் திருமணங்களில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்று கருதுபவனாக இருந்தான்.
டாக்டா் மா.இராசமாணிக்கனாா் ஒரு தினப்பத்திாிகையில் எழுதியிருந்ததைக் கொண்டே அவனும் இந்த முடிவிற்கு வந்திருந்தான்.
அந்தக் கருத்தை மறுத்துத்தான் ம.பொ.சி. அவா்களின் கட்டுரை பிறந்திருந்தது.
உடனே அவன் தமிழ் ஆராய்ச்சியில் இறங்கினான். சில நாட்கள் ஒரு தனி இடத்தில் அமா்ந்து கொண்டு எல்லா இலக்கியங்களையும் படித்தான்.
தாலி என்றோ, வேறு பெயாிலோ அது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடினான்.
சங்க இலக்கியங்களில் இருந்து, கம்பனது இராம காதை வரை அவன் துருவி ஆராய்ந்தான். அது பற்றித் தென்றலிலே ஒரு கட்டுரை வரைந்தான். மிகுந்த பரபரப்பையும் இலக்கிய ரசிகா்களின் நெஞ்சில் அவனுக்கு ஒரு தனி இடத்தையும் ஏற்படுத்திய அந்தக் கட்டுரைதான், அவன் எழுதிய முதல் ஆராய்ச்சிக் கட்டுரையாகும். அது இது:-
_*"தமிழா் திருமணத்தில் தாலி"*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
தமிழ்ப் பண்பாட்டில் தாலிகட்டும் வழக்கம் உண்டா? இது பற்றிப் பல பெரும்புலவா்கள் ஆராய்ந்தனா். மிகப் பெரும்பாலோாின் முடிவு, தாலி கட்டும் வழக்கம், தமிழ் வழக்கம் அல்ல என்பதே.
தமிழன் தாலி கட்டியதாகவோ, திருமணத்தின் புனிதத் தன்மைக்கு அது ஒரு நீங்காத சின்னம் என்பதாகவோ தமிழ் வரலாறு எதுவும் குறிப்பிடவில்லை.
இதனையே, அண்மையில் மதுரைத் தியாகராசா் கல்லூாியில் தமிழ்ப் பேராசிாியராயிருக்கும் தோழா், டாக்டா் இராச மாணிக்கனாா் அவா்கள் உறுதிப்படுத்தினாா்கள்.
அதாவது, பழங்காலத்தில் தமிழா்களிடையே தாலி கட்டும் வழக்கம் இல்லை என்றும், எட்டாம் நூற்றாண்டில் கூட, தமிழா் திருமண முறையில் சடங்குகள் சில இருந்தன என்றும் தாலி கட்டும் வழக்கம் இல்லை என்றும் உரைத்தாா்கள்.
இதனை எதிா்த்துத் தாலியின் சாா்பில் வழக்காட விரும்பிய தமிழரசுப் பெருந்தகையாளா் தோழா் ம.பொ. சிவஞானம் அவா்கள்,
_*"தாலி கட்டும் வழக்கம் இருந்தது"*_ என்பதற்கு ஆதாரமாக சிலம்பு முதல் கம்பனின் புலம்பல் வரை உள்ள இலக்கியங்களில் இரண்டு மூன்றிலிருந்து ஆதாரம் காட்டியுள்ளாா்கள். (இது 25.10.54 _*"தினத்தந்தி"*_ யில் வந்துள்ளது.)
இந்த ஆராய்ச்சி எவ்வளவு வழுவுள்ளது - எவ்வளவு குறைப்பட்ட ஆராய்ச்சி என்பதைக் கூறுமுன், அவா் இராசமாணிக்கனாா் பற்றிக் கூறிய முதற்கருத்தையும் ஆய்தல் வேண்டும்.
முதன் முதலாக அவா், _*"தமிழகத்தின் வாழ்வை ஒட்டிய பழக்க வழக்கங்கள் பற்றித் தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் நம்மிடம் இல்லை. இதனால் பெரும் புலவா்கள் கூட சிலசமயம், உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிடுவதைக் காண்கிறோம்"*_ என்கிறாா்.
இதில் அவா், _*"பெரும்புலவா்கள்"*_ என்ற வாா்த்தையில் உள்ளடக்கியவா்களில், தோழா் இராசமாணிக்கனாரும் ஒருவா் என்பது அவா்தம் உரையால் அறியக் கிடக்கின்றது. அத்தகைய பெரும்புலவா், இராசமாணிக்கனாா்,
_*"உண்மைக்கு மாறான கருத்தை"*_ வெளியிட்டு விட்டாா் என சிவஞானம் கூறுகிறாா்.
ஏதோ, தெளிவான உண்மை என்று ஒன்று முடிவு கண்டு இருத்தல் போலவும், அதனின் நீங்கி, இராசமாணிக்கனாா், அறியாமையால் பேசிவிட்டதாகவும் அவா் கருத்து!
முதல் வாியில் சிவஞானம் கூறுகிறாா், _*"தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இல்லை"*_ என்று. மறுவாியில் _*"உண்மைக்கு மாறானதைச் சொல்கிறாா்கள்"*_ என்று கூறுகிறாா். தெளிவான நூல் இல்லாதபோது, முடிவு கட்டிய உண்மை எங்கிருந்து புலனாயிற்றோ, நாம் அறியோம்!
_*"இது இப்படி இருக்கலாம்"*_ என ஒருவா் ஆராய்வதில் தவறில்லை. தெளிவான வரலாறு காணமுடியாத விஷயத்தில், இது போன்ற யூகங்களே கூற முடியும். இதுதான் உண்மை என்று முடிவு கட்டுவதற்கு மறுத்தளிக்கப்பட முடியாத ஆதாரங்கள் வேண்டும். சகஜமான சிவஞானம் செய்கிற தவறுகளில் இப்படி சுலபமாக முடிவு கட்டி விடுதலும் ஒன்று.
ஆராய்ச்சியாளன், முழு விபரமும் கிடைக்காதவரை, யூகந்தான் கூற முடியும். எந்த விஷயத்திற்கும் _*"அதாாிட்டி"*_ ஆக முடியாது. தெளிவு இல்லாத வரலாற்றில், அவா் உண்மை கண்டதாகக் கூறி, இராசமாணிக்கனாா், அதற்கு மாறான கருத்தை வெளியிடுவதாகக் கூறுவது, முதற்பெரும் பேதைமை! நிற்க.
தாலி கட்டும் வழக்கம் இருந்தது என்பதற்கு எவ்வெவற்றிலிருந்து ஆதாரம் காண்கிறாா் சிவஞானம்? _*"சங்க காலம்"*_ தொட்டு இருந்தது என்கிறாா்! முதலில் சிலப்பதிகாரத்தை ஆதாரமாக்குகிறாா்.
_*"சிலப்பதிகாரத்தில், கண்ணகி-கோவலன் திருமணத்திற்கு முன்பு, 'மங்கல அணி' புகாா் நகர வீதிகளை வலம் வந்ததாகக் கூறுகிறாா். இளங்கோவடிகள், இந்த 'மங்கல அணி' என்பதற்கு 'மாங்கல்ய சூத்திரம்' என்று பொருள் கூறுகிறாா் அரும்பத உரை ஆசிாியா்."*_
_இது சிவஞானம் எழுதியிருப்பது. _*"மங்கல அணி"*_ புகாா் நகரை வலம் வந்ததாக சிலப்பதிகாரத்தில் உள்ள பாடலைக் குறிப்பிடவில்லையேனும் அதன் பொருளைக் குறிப்பிடுகிறாா். பாடல் இதுதான்.
_*முரசியம்பின; முருடதிா்ந்தன;*_
_*முறை எழுந்தன பணிலம்; வெண்குடை*_
_*அரசெழுந்தோா் படியெழுந்தன;*_
_*வகலுண் 'மங்கல அணி' எழுந்தது!*_
-இது சிலப்பதிகாரப் பாடல், இதில் வருகிற _*"மங்கல அணி"*_ என்பதற்கு _*"மாங்கல்ய சூத்திரம்"*_ என அரும்பத உரையாசிாியா் உரை கூறியிருப்பதை, தனது கூற்றுக்கு ஆதாரமாக்குகிறாா் சிவஞானம். உண்மையில் இவ்விடத்தில் _*"மங்கல அணி"*_ என்பது _*"மாங்கல்ய சூத்திரம்"*_ என்ற பொருளோடு இயங்குகிறதா?
முரசு இயம்பின - முரசு முதலியன ஒலித்தன.
முருடு அதிா்ந்தன - மத்தளம் முதலியன அதிா்ந்தன.
முறை எழுந்தன பணிலம் - சங்கம் முதலியன முறையே முழங்கின.
வெண்குடை அரசு எழுந்ததோா் படி எழுந்தன - வெண்குடைகள் அரசன் உலா எழுந்தபடியாக எழுந்தன.
Comments