பயத்தை தைரியமாக எதிர்கொள்ள உதவும் 8 வழிமுறைகள்!
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பயம் இருக்கும். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். பயத்தை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் ஒரு கலையாகும். அச்சத்தை எதிர்கொண்டு வெற்றிபெற உதவும் எட்டு வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அச்சங்களை அடையாளம் காணுதல்;
எந்தெந்த விஷயங்கள் அச்சத்தை தருகின்றன என்பதைப் பற்றிய புரிதல் ஒருவருக்கு மிகவும் அவசியம். ஒரு பட்டியல் தயார் செய்து அதில் அச்சம் தரும் விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். பொதுவாக எழுதாமல் குறிப்பிட்டு எழுத வேண்டும் உதாரணமாக ‘பேசுவதற்கு நான் பயப்படுகிறேன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக எந்த இடத்தில் பேசுவதற்கு பயப்படுகிறீர்கள் என்று எழுதலாம். மேடைப் பேச்சு அல்லது நண்பர்களுடன் பேசுவது, புதியவர்களுடன் பேசுவது கூட்டத்தில் பேசுவது போன்றவற்றில் எதில் ஒருவருக்கு பயம் என்பது பற்றிய தெளிவு வேண்டும்.
2. காரணம்;
எதனால் அந்த பயம் ஏற்பட்டது என்பதை பற்றிய காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதைப்பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும். அதற்கு தன்னைத்தானே ஒருவர் மிகவும் புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு உயரத்தை பார்த்தால் பயம் ஏற்படும். எப்போது, எதனால் அந்த பயம் ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய வேண்டும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிப்பது பயத்தை குறைக்க உதவும். அவர் அதை சமாளிக்கும் நுட்பங்களை வழங்குவார்.
3. படிப்படியாக எதிர்கொள்ளுதல்;
பயத்தை தவிர்க்காமல் அதை படிப்படியாக எதிர்கொள்ள வேண்டும். இதற்கு எக்ஸ்போஷர் தெரப்பி என்று பெயர். உதாரணமாக மேடைப்பேச்சில் பயம் இருந்தால் முதலில் கண்ணாடி முன் நின்று பேசிப் பழகவேண்டும். பின்பு வீட்டில் உள்ள நபர்களுடன் பேசுதல், நண்பர்கள் குழுவில் பேசுதல், சிறிய கூட்டத்தில் பேசுதல் என்று படிப்படியாக முயற்சி செய்தால் கடைசியில் மேடைப்பேச்சு பற்றிய பயம் அறவே அகன்று விடும். நாளடைவில் மேடைப் பேச்சில் சிறந்து விளங்க முடியும்.
4. தளர்வு நுட்பங்கள்;
பயத்தை எதிர்கொள்ளும்போது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். நான்கு எண்ணி ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும். நான்கு எண்ணி அதை உள்ளே வைத்து பின்பு நான்கு எண்ணி சுவாசத்தை வெளியே விட வேண்டும்.
5. மைண்ட் ஃபுல்னஸ் மற்றும் தியானம்;
தற்போதைய தருணத்தில் வாழவேண்டும். ஒவ்வொரு செயலையும் அனுபவிக்க ரசித்து செய்ய வேண்டும். மற்றும் தியானப்பயிற்சியும் கவலை பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளை நன்றாகக் குறைக்க உதவுகிறது.
6. வெற்றியை காட்சிப்படுத்தல்;
பயத்தை வெற்றிகரமாக சமாளிக்க காட்சிப்படுத்துதல் நன்றாக உதவும். மன ஒத்திகை கவலையை குறைத்து பயத்தை அகற்றி நன்றாக செயல்பட வைக்கும். மேடையில் ஏறி கூட்டத்தினர் முன்பு அருமையாக, சிறப்பான சொற்பொழிவு ஆற்றுவது போல கற்பனையில் படமாக ஓட்டி பார்க்க வேண்டும். மேலும் நேர்மறையான உறுதிமொழிகளை பயன்படுத்த வேண்டும். ‘’நான் மிகத் திறமையானவன். என்னால் இதை சிறப்பாக கையாள முடியும் போன்ற சொற்றொடர்கள் ஒருவரை மேம்படுத்தும்.
7. மறுவடிவமைப்பு;
சாத்தியமான எதிர்மறை விளைவுகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பயத்தை சமாளித்துக் கொண்டு நேர்மறையான சாத்தியக்கூறுகளைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நன்றாக மறு வடிவமைப்பு செய்வது அவசியம்.
8. வெற்றிகளைக் கொண்டாடுதல்;
சிறிய முன்னேற்றத்தை கவனித்து அவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும். பயம் ஏற்படும்போது அதை எடுத்துப் பார்த்தால் மனதிற்கு தைரியமும் துணிச்சலும் ஏற்படும். சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாட வேண்டும். இந்த எட்டு வழிமுறைகளும் அச்சங்களை எதிர்கொண்டு அவற்றை அகற்ற உதவும்.
Comments
Post a Comment