காபியா கப்பா?
கல்லூரியை விட்டு வெளியே வந்து, நெடுங்காலத்திற்குப் பிறகு, ஒரு பழைய குழுவினர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்; மிக நல்ல அளவில், பணம் சம்பாத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஒருவரது வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.
அந்த பேராசிரியர், அவர்களது வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கினார். மெதுவாக அந்த உரையாடல், அதிகரித்துக் கொண்டு செல்லும் போது மன அழுத்தம், மேலும் வாழ்க்கையில் உள்ள வேலையின் சுமை - இவற்றைப் பற்றியதாகச் சென்றது.
இந்த விஷயத்தில், அனைவருமே ஒரே விதமான கருத்தையே கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருமே, பண விஷயத்தில் எந்த விதமான குறைபாடு ஏதும் இல்லாமல், வலுவாக இருந்த போதும், அவர்களது வாழ்க்கை, வழக்கமாக இருக்க வேண்டியது போல, வலிமையாகவோ, வேடிக்கையாகவோ இருக்கவில்லை.
அந்த பேராசிரியர் அவர்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென்று எழுந்து சென்றார்; சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்; அவர் கூறினார்,“ எனது அருமை, மாணவர்களே, நான் உங்களுக்காக, சூடாக காபி தயார் செய்து விட்டேன். ஆனால், தயவு செய்து, நீங்கள் அனைவரும் சமையல் அறைக்குச் சென்று, உங்களுக்கான கப்புகளை எடுத்து வாருங்கள்.”
அந்த மாணவர்கள், உடனே, உள்ளே சென்றார்கள்; அங்கே பல்வேறு வகையான கப்புக்கள் அங்கே வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று மிகச் சிறந்த கப்பை எடுக்கத் தொடங்கினார்கள்.
சில பேர் அழகான பளிங்கு கப்புகளை எடுத்தார்கள். சில பேர் பீங்கான் கப்புகளையும், மேலும் சில பேர் கண்ணாடிக் கப்புகளையும் எடுத்தார்கள்.
அனைவரும், தங்கள் கைகளில் காபியுடன் இருக்கும் போது, அந்த பேராசிரியர் கூறினார்,“ நீங்கள் அனைவருமே, சிறந்த தோற்றமுடையதும், விலை மிக்கதுமான கப்புக்களை தேர்ந்தெடுப்பதில், உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள்; மேலும் சாதாரணமான கப்புகளை நோக்கி உங்கள் கவனம் செல்லவும் இல்லை. ஒரு பக்கம் பார்த்தால், இது சாதாரணமானதுதான்; உங்களுக்கான மிகச் சிறந்ததை எடுத்தது என்பது! இன்னொரு பக்கம் பார்த்தால், இது நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும், மேலும் மன அழுத்தத்தையும் கொண்டு வருகிறது. ஒன்று உறுதி, அதாவது, அந்த கப்பானது காபியின் தன்மையை மாற்றப் போவது இல்லை. அது வெறுமனே, நீங்கள் காபியைக் குடிக்கப் பயன்படும் ஒரு வழிமுறை, மட்டும்தான்.
அடிப்படையில், உங்களுக்குத் தேவையானது என்னவென்றால், வெறுமனே காபி மட்டுமேதான்; கப் அல்ல. ஆனால், இன்னும் கூட, நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த கப்புடன் வந்த பிறகும் கூட, அடுத்தவர்களின் கப்பைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இப்போது, இதனைக் கவனமாக கவனியுங்கள். ……..
“ இந்த வாழ்க்கையும் காபி மாதிரிதான். நமது வேலைகள், பணம், பதவிகள் இவை யாவும் கப்பைப் போன்றவைகள். இவை எல்லாமே வழிகளே தவிர, அவையே வாழ்க்கை அல்ல! நம்மிடம் இருக்கிற கப், நமது வாழ்க்கையை விவரிக்கவோ அல்லது நமது வாழ்க்கையை மாற்றவோ செய்து விடாது. அதனால்தான் காபியைப் பற்றி கவலைப் படுங்கள்; கப்பைப் பற்றி அல்ல.” என்கிறேன்.
எல்லாப் பொருட்களிலும், மிகச் சிறந்ததை வைத்திருப்பவர்கள்தான் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இந்த உலகத்தில் இருக்கிறார்கள், என்பதல்ல. தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்துபவர்களே மிகவும் மகிழ்ச்சியுடையவர்களாகவும், ஆனந்தத்தோடு முழுமையான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.
“ புன் சிரிப்பு, எளிமை மேலும் இதய பூர்வமான அன்பு–இவை நம் வாழ்க்கையை முழுவதுமாக குதூகலம் அடையச் செய்ய முடியும்.
Comments
Post a Comment