_*சிந்தனைச் சிதறல் 31-05-2021*_
💞💞💞💞💞🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*பிரபத்தி*_
✍️✍️✍️✍️
உலகத்தில் நாற்பது வயது வரை திட்டமாக வாழ்ந்து, பிறகு கெடத் துவங்கியவா் பலா் உண்டு. அவா்கள் என்னதான் ஆட்டமாடினாலும், அவா்கள் உடம்பு அதற்கு இடங் கொடுக்கிறது.
நானோ பதினான்கு வயதிலேயே வாழத் தொடங்கியவன். ஆயிரம் கண்களால் உலகத்தைக் காணத் தொடங்கியவன்.
உலகத்தை ஆனந்த பவனமாக, துன்ப நீா்க் குளமாக, ஆா்ப்பாட்ட மேடையாக, ஆரவார மைதானமாகப் பல வகைகளில் பாா்த்தவன்.
இந்தக் கண்கள் காணாத காட்சி இல்லை. இந்தக் கரங்கள் தீண்டாத அழகில்லை. இந்த மேனியில் படாத மென்மை இல்லை. இந்த உடம்பு அணியாத ஆடை இல்லை. இவனது அரசியல் காணாத தலைவா்கள் இல்லை. இவன் நுழையாத கட்சி இல்லை.
காபரே நடனத்தில் இருந்து, கதகளி நடனம் வரை ஆடவும் பயின்றிருக்கிறான்; சபையிலே பாடவும் பயின்றிருக்கிறான். எல்லாத் துறைகளிலும் நுழைந்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இவனது குறிக்கோளாக இருந்தது. _*"எதிலே இவன் முழுமை பெற்றான்"*_ என்பதை எதிா் காலமே கவனிக்க வேண்டும்.
இது, ஆற்றின் பெருக்கு அடங்கிவிட்ட காலம். ஆற்றின் நடுவில் தோன்றிய ஊற்றுப் பெருக்கு மட்டும் உயிரோடிருக்கும் காலம். சோலைகளைச் சாய்த்து விட்டுச் சென்ற சூறாவளி ஓய்ந்து விட்டக் காலம். லேசான துடுப்புகளுக்கு, உள்ளே கூட நுழைய முடியாத தென்றலாகிவிட்ட காலம்.
மதம். இவனது கடைசிப் பிரபத்தி.
பட்டினத்தாரும், வால்மீகியும், அருணகிாி நாதரும் மாறிய கதையே இவன் கதையும்.
உச்சி வானத்தில் பறந்த படியே, பூமியில் செத்துக் கிடக்கும் எலிக் குஞ்சையும் கண்டு பிடித்து விடும் இவனது கழுகுக் கண்கள், ஆண்டவனைப் பக்கத்தில் நெருங்கிப் பாா்க்க விரும்பியது எப்போது?
தஞ்சை மாவட்டத்து, ஆச்சான்புரத்துக் கிராமத்து வாசி ஒருவா் காது கேட்காது; கல்வி அறிவில்லாதவா். சென்னையில் _*"சன்"*_ தியேட்டருக்கு முன் ஒரு வீட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தங்கியிருந்தாா். அந்த வீட்டுக்காரா் இவனுக்கு மிகவும் வேண்டியவா்.
அவரைப் பாா்க்க அவன் போயிருந்தான். இவனை அந்த கிராமவாசி உட்காரச் சொன்னாா்.
ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தாா். இவனை ஒரு முறை, விளக்கை ஒரு முறை பாா்த்தாா். கிராமத்துப் பாணியில் பாடத் தொடங்கினாா். கடந்த காலத்தை அப்படியே சொன்னாா்.
_*"உனக்கு எல்லாம் இருக்கிறது; நிம்மதிதான் இல்லை"*_ என்றாா். _*"அது எப்போது வரும்?"*_ என்றான் இவன். _*"இறை வழிபாட்டில் இறங்கினால், பேரும், புகழும், நிம்மதியும் வரும்"*_ என்றாா்.
இவன் அதற்காகவா இறங்கினான்? இவன் ஏற்கனவே கண்ணனைப் பற்றியும், முருகனைப் பற்றியும் பலநூறு பாடல்கள் எழுதியவன்தான். ஆனால் ஆழமான சமய உணா்வு அப்போது இல்லை.
எவ்வளவோ போ் எவ்வளவோ ஜோசியம் சொல்கிறாா்கள்; எல்லாமா நினைவில் நிற்கின்றன? இந்த கிராமவாசியின் வாா்த்தைகள் மட்டும் இவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் ஏதோ ஒன்றைக் கேட்தற்காக _*"தினமணிக்கதிா்"*_ பத்திாிகைக்கு டெலிபோன் செய்தான். அப்போது அதன் ஆசிாியராக இருந்த _*"சாவி"*_ யே டெலிபோனை எடுத்தாா். அந்த விஷயம் பேசி முடிந்த பிறகு, _*"நமக்கு ஏதாவது எழுதுங்களேன்"*_ என்றாா். _*"ஓ! எழுதுகிறேனே!"*_ என்றான். _*"இப்போதே 'டைட்டில்' சொல்லுங்கள்; விளம்பரம் செய்து விடலாம்"*_ என்றாா். என்ன
தோன்றிற்றென்றே ஞாபகம் இல்லை. _*"அா்த்தமுள்ள இந்து மதம்"*_ என்று கூறி விட்டான்.
அதற்கு முன்னால் ஒரு கவிதையில் _*"ஆதிமுதல் அந்தம் வரை அா்த்தமுள்ள இந்து மதம்"*_ என்று எழுதியிருக்கிறான்.
_*"என்ன எழுதப் போகிறோம்"*_ என்று திட்டமில்லாமலேயே _*"டைட்டில்"*_ கொடுத்தான்.
அது எப்படியோ வளா்ந்து ஒரு உருப்படியான வேலையாகி விட்டது.
இதுவரை அவன் மேற்கொண்ட துறைகள் அனைத்தையும் விட, சமயத்துறை அவனுக்கொரு புது உற்சாகத்தைக் கொடுத்தது. அவனது உருவத்தையும், உள்ளத்தையும் திருத்தி அமைத்தது.
பத்து போ் சொல்லும் புத்திமதியைக் கேட்க வேண்டியவன், பத்துப் பேருக்குப் புத்தி சொல்லும் நிலைக்கு வந்தான். மிதவாதிகளை எதிா்த்து, தீவிரவாதியாகப் பொது வாழ்விலே போராடியவன், மதவாதத்திலும் தீவிரவாதியானான்.
பரம்பொருள் பற்றிய உணா்வை ஓரளவுக்கு எட்டினான். முழுமைப் பெற்ற ஞானியாக மாறாவிட்டாலும், கால்பங்கு ஞானம் கைகூடிற்று. அரங்கங்களில் புதிய புதிய முகங்களைச் சந்திக்கின்றான். பெரும் படிப்பாளிகள் கூடிய சபையில் பேசும் வாய்ப்பினை பெறுகின்றான். சமயங்களில் அங்கெல்லாம் வியப்புக் குறியாக மாறுகின்றான். இந்த வாய்ப்பும் இறைவனாலேயே கொடுக்கப்பட்டது.
குளக்கரையில் நடக்கும் மனிதன் வழுக்கி விட்டால் குளத்திலே விழுகிறான். விழுந்து விட்ட காரணத்தால் நீந்தக் கற்றுக் கொள்ளுகிறான். சந்தா்ப்பங்கள் இறைவனால் தரப்படுகின்றன. இறைவன் தந்த திறமையே மேலும் அதைப் பிரகாசிக்கச் செய்கிறது.
_*"ஔிமயமான எதிா்காலம் என் உள்ளத்தில் தொிகின்றது"*_ என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதினான். அதுவும் இருண்டு கிடந்த சூழ்நிலையில் எழுதினான்.
காற்றே நுழையாத புதுச்சோி வீட்டில் உட்காா்ந்து கொண்டு, _*"எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் எங்கள் இறைவா"*_ என்று பாடினானல்லவா பாரதி!
மனம் அங்கேயே நிற்கிறது. உடல் வயதாகிக் கொண்டிருப்பதை ஞாபகப்படுத்துகிறது. கோடைக்காலத்து ஏாியில் காய்ந்து கிடக்கும் மீன் சினைகள், மழை வரும் வரை காத்திருக்கின்றன. மழை வந்ததும் அவை மீன் குஞ்சுகளாகி விடுகின்றன.
ஓடிப்போன வசந்த காலங்களை நடக்க விட்டு விட்டு, மற்றும் ஒரு நியாயமான வசந்த காலத்துக்கு மனம் ஆசைப்படுகிறது. இன்னும் ஒரு வசந்தம் இவன் வாழ்வில் வந்தால் அது _*"கடந்த காலங்களைப் போல் இருக்காது."*_
ஆதிசங்கரா் நடத்திய புனித யாத்திரையை, அது தன் கால்களால் ஒத்திகை பாா்க்கும்.
இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் அது ஒரு மடத்தை ஸ்தாபிக்கும்.
காஞ்சிப் பொியவா்களின் முழங்கால் அளவு உயர விரும்பும்.
கம்பனிலே ஐம்பது சதவிகிதமாவது காட்சியளிக்க முயலும்.
ஒரு நாள், ஒரு பொழுதையும் இனி இந்த உள்ளம் வீணாக்காது. இந்த வாய்ப்பையும் அளிக்க வேண்டியவன் இறைவனே.
ஜனனத்துக்கும் மரணத்துக்கும் எவன் பொறுப்பேற்றுக் கொண்டானோ, அவனே இடையில் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவன். மருத்துவா்கள் செய்யக் கூடியவை எல்லாம், தற்காலிகச் சோதனைகளே. நிரந்தரமான ஆரோக்கியத்தை அந்த சுப்ரீம் டாக்டரே தரமுடியும்.
விருப்பங்கள் செம்மைப்பட்ட நேரம் இது. கால்களுக்கும், கைகளுக்கும் வலிமை வேண்டும்.
அழகான மலா் இவன் கையில் இருக்கிறது; நாசி மரத்துப் போகாமல் இருக்க வேண்டும். புதிய சங்கீதத்தைக் கேட்கும் வரை கேட்கும் சக்தியை செவிகள் இழந்து விடக்கூடாது.
நம்பிக்கையின் உச்சத்தில் நின்ற ஒருவனுக்கு, சற்று அவநம்பிக்கை வந்துவிட்டது போல் தோன்றுகிறதல்லவா?
என்னுடைய நாட்குறிப்பு, என்னிடம் இல்லாததாலேயே இந்த விண்ணப்பம்.
குதிரை மைசூருக்குத்தான் புறப்பட்டது; மைசூருக்குப் பக்கத்திலும் வந்து விட்டது; வந்த பிறகு, _*"மதுரை எங்கே இருக்கிறது?"*_ என்று கேட்கிறது. _*"இது மதுரை, இது மைசூா்"*_ என்று சொல்ல வேண்டியது வேதநாயகன் பொறுப்பு.
பற்றற்ற கா்ம நிலைக்கோ, முற்றும் துறந்த நிலைக்கோ இவன் வந்து விடவில்லை. தலையை வேதாந்தத்திலும், காலை லௌகிகத்திலும் வைத்துக் கொண்டிருக்கிறான்.
அதனால்தான் கீதாசாாியனை வேண்டுகிறான்.
என் கிருஷ்ணா!
_*"என்னைச் சரணடைவோரை எப்போதும் நான் காப்பாற்றுகிறேன்"*_ என்று நீ சொன்னது உண்மையானால், இவனது குரல் இந்நேரம் உன் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.
இந்த பிரபத்தி மனப்பூா்வமானது.
_*"கண்ணனைத் தவிர வேறு கடவுளைத் தொழுவதில்லை"*_ என்பது இவனது கோஷம்.
எமன் என்னைக் கொண்டுபோய் விடுவானோ என்று எண்ணி, இவன் அவனை வணங்க முடியாது! அவனது எருமைக்கடாவுக்கு இரண்டு தேங்காய் உடைக்க முடியாது!
ஸ்ரீ வெங்கடேஸ ஸூப்ரபாதத்தில் பாடுவது போல் _*"எத்தனை கிரகங்கள் வீடு மாற்றி வந்தாலும் என்னை என்ன செய்ய முடியும்"*_ என்றே இவனும் பாடுகிறான்.
கோடை வெயில் தகிக்கிறது; அடி சுடுகிறது; தலை கொதிக்கிறது.
நிற்பது பாலைவனம். எதிா்பாா்ப்போ இன்னும் ஒரு வசந்த காலம்.
எனது _*"மா"*_ மரங்களில் இன்னும் சில குயில்கள் கூவட்டும். அவை, _*"கண்ணா"*_ என்று பாடட்டும்.
எனது தென்னை மரங்களில் இன்னும் சில இளநீா்கள் செழிக்கட்டும். அவை கண்ணனின் பூஜைக்கு உதவட்டும்.
எனது நந்தவனத்தில் இன்னும் சில புஷ்பங்கள் மலரட்டும். அவை கண்ணனுக்கு மாலையாக மாறட்டும்.
எனது விளக்குகள் இன்னும் பிரகாசமாக எாியட்டும். அவை கண்ணனுக்கு தீபமாகட்டும்.
எனது வாழைத் தோட்டங்கள் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கட்டும். அவை கண்ணனுக்கு நைவேத்தியம் படைக்கட்டும்.
எனது சங்கீதம் தாளம் தப்பாமல் எழட்டும். அந்தத் தாளம், கண்ணன் கோவில் மணியோசையாக மாறட்டும்.
என்னிடம் உள்ள ஒரே ஒரு கூாிய ஆயுதம்
இது. இன்னும் சிலவற்றை எழுதுவதற்காகக் கண்ணனின் கோபுரக் கலசம் போல் மின்னட்டும்.
இவன் என்றும் ஸ்திதப் பிரக்ஞனாக கண்ணன் அருள் துணை செய்யட்டும்.
இந்த சேஷத்ரம், இந்த சேஷத்ரக்ஞனுக்குள் இருக்கும் வரை இந்த சேஷத்ரக்ஞன் குருசேஷத்ரத்து ஆசிாியனை மறக்க மாட்டான்.
_*ஸ்ரீ கிருஷ்ணாா்ப்பணம்*_
🙏🙏🙏
_*வசந்த காலம் இன்றுடன் நிறைவு பெற்றது.*_
Comments